பினாங்கில் திறன்மிக்க மனித வளத்தை அதிகரிக்க இலக்கு – ஜக்தீப்

Admin
whatsapp image 2024 04 23 at 21.36.08 2

UWC பெர்ஹாட் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தியாளராக அதன் தற்போதைய நிலையை அடைய குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு செயல்படுகிறது.

இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ அண்மையில் UWC Industrial Sdn Bhd நிறுவனத்திற்கு வருகையளித்த போது, UWC நிறுவனத்தின் வெற்றிக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக UWC நிறுவனம் பல்வேறு துறைகளில் வளர்ச்சிக் கண்டு வருவதோடு அதன் மனித வளத்தையும் நன்கு மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும் என ஜக்தீப் கூறினார்.
whatsapp image 2024 04 23 at 21.36.08
“கடின உழைப்பு மற்றும் விவேக உத்திகளைத் தொடருங்கள்; பினாங்கு மாநில அரசாங்கம் தொழில்துறையின் தேவையைப் பூர்த்தி செய்ய திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.

“இது பினாங்கு முன்னோக்கிச் செல்வதைக் குறிக்கிறது. இங்கு அனைத்து பங்குதாரர்களும் நமது மாநிலத்தில் தொழில்துறையின் கணிசமான வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளில் இருந்து பயனடைகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

மனித மூலதன மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப போர்ட்போலிவிற்குக் கூடுதல் கவனம் செலுத்துவதாக பினாங்கின் துணை முதலமைச்சரும், அதன் ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜக்தீப் கூறினார். ஏனெனில், இது பினாங்கு வாழ் மக்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும்.

தொழில்துறையில், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில், வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, நடப்பு மற்றும் எதிர்கால திறன்மிக்க தொழிலாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஜக்தீப், அத்தகைய தயார்நிலையின் மூலம் மட்டுமே கிழக்கின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற அந்தஸ்தை பினாங்கு மாநிலம் நிலைநிறுத்தி, 350 பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் 6,000 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) விருப்பமான மையமாக இருக்க முடியும் என்று வலியுறுத்தினார்.

UWC நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹெங் சாய் இங் கருத்துப்படி, இந்நிறுவனத்தின் பயணம் 1990 இல் கம்பி வெட்டும் இயந்திரங்களை விற்கும் வர்த்தக நிறுவனமாக தொடங்கியது. இது பின்னர் ஒரு மின்தூக்கி உற்பத்தியாளராக உருவானது, இறுதியில் உலகத் தரம் வாய்ந்த ஒப்பந்தமுறை உற்பத்தியாளராக உருமாறியது.

“கடந்த மூன்று தசாப்தங்களாக, UWC தனது வணிகத் துறையை விரிவுபடுத்தியுள்ளது, குறைக்கடத்திகள் மற்றும் உயிர் அறிவியல் உபகரணங்கள் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி சேவைகளை வழங்கும் ஒருங்கிணைந்த பொறியியல் சேவை வழங்குநராக மாறியுள்ளது.

“ஆறு ஆலைகளில் (பினாங்கு தலைமையகம், பேராக், ஜோகூர், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து) 1,790 பணியாளர்களுடன், UWC நிறுவனம் முன்-இறுதி குறைக்கடத்தி, 5G, EV மற்றும் AV தொழில்களில் முன்னேறி வருகிறது,” என்று இங் கூறினார்.

UWC பெர்ஹாட் சமீபத்தில் ஒரு EV பேட்டரி டெஸ்டர் மாடலின் அதிகமான உற்பத்தியைத் தொடங்கியுள்ளது, மேலும் இரண்டு தயாரிப்புகள் 2024 இன் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி லாவ் சீ கியோங்; துணை தலைமை நிர்வாக அதிகாரி மாத்தின் இங் சின் லியாங் மற்றும் UWC அதிகாரிகள் கலந்து கொண்டனர்.