கடந்த ஜுலை 16-ஆம் திகதி வியாழக்கிழமை அன்று அனைத்துலக இந்திய விற்பனை பெருவிழா, பினாங்கு ஸ்பாஸ் அரேனா அரங்கில் திறப்பு விழாக்கண்டது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். 7வது முறையாக பினாங்கில் நடைபெறும் இந்நிகழ்வை பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் மதிப்பிற்குரிய பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றினார். அஜெண்டா சூரியாவின் தலைமை செயல்முறை இயக்குநரான திரு.ஜெகா ராவ், பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் பின் ஹஸ்னோன், பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர் திரு குமரேசன் உட்பட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்தப் பெருவிழாவில் அஜெண்டா சூரியா நிறுவனம் ரிம 25,000-ஐ பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு நன்கொடையாக வழங்கியது. இந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை இயக்குநர் திரு ஜெகாராவ் மாதிரி காசோலையை இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி அவர்களிடம் வழங்கினார். இது தங்கள் நிறுவனம் சமுதாயத்திற்கு வழங்கும் சேவையாகக் கருதுவதாக திரு ஜெகா ராவ் கூறுனார். இந்த நன்கொடை Penang Skills Development Centre(PSDC) எனும் தொழிற்கல்வி கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளமாக வழங்கப்பட்டது என இந்து அறப்பணி வாரியத் தலைமை நிர்வாக இயக்குநர் திரு இராமசந்திரன் கூறினார்.
இத்திறப்பு விழாவில் உள்நாட்டு கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பிரமுகர்கள் மற்றும் வருகையாளர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டனர். ஒரு வாரம் நடைபெற்ற இவ்விழாவில் பினாங்கு இந்திய நடனப் போட்டி, நடனக் குழுவினரின் நடன படைப்புகள், குழந்தைகளுக்கான ஆடை அலங்காரப் போட்டி, சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளைச் சிறப்பாக டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்கள் நன்கு வழிநடத்தினர். முதன் முறையாக பினாங்கில் நடைபெற்ற இந்திய நடனப் போட்டியில் பல உள்ளூர் நடனக் குழுவினர்
பங்கெடுத்தனர். இப்போட்டியில் முதல் நிலை வெற்றியாளராக பினாங்கு மாநிலத்தை சேர்ந்த சிவலாயா நடனக் குழுவினர் தேர்வுப் பெற்று ரிம5,000 பரிசுத் தொகையைத் தட்டிச் சென்றனர்.
இவ்விழாவில் துணிமணிகள், காலணிகள், சுடிதார், சேலை, அழகுச் சாதனப்பொருட்கள், உணவுப் பதார்த்தங்கள் என பல்வகை பொருட்களும் மிக மலிவான விலையில் ஒருங்கே விற்கப்படுகின்றன. இந்த மாபெரும் விழாவில் விற்கப்படும் பொருட்கள் யாவும் வித்தியாசமானவை காரணம் இந்தியாவின் வட மாநிலங்களான புதுடில்லி, காஷ்மீர், இராஜஸ்தான் மற்றும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து வணிகர்கள் தங்களின் பொருட்களை இங்கு விற்கின்றனர்.
இந்திய சந்தை பெருவிழா கடந்த சில ஆண்டுகளாக மலேசியாவின் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது என்றால் மிகையாகாது. ஸ்பாஸ் அரேனா அரங்கில் இடம்பெற்ற கடைகளில் 70% கடைகள் உள்நாட்டு வணிகர்களுக்கும் 30% மட்டுமே வெளிநாட்டு வணிகர்களுக்கும் ஒத்துக்கீடுச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆண்டு பினாங்கு மாநிலத்தைச் சார்ந்த அதிகமான வர்த்தகர்கள் கலந்து கொண்டு விற்பனையில் ஈடுப்பட்டனர்.
அனைத்துலக இந்திய விற்பனை விழாவானது தொடர்ந்து நமது நாட்டின் பிரதான மாநிலங்களில் இடம்பெறும் என திரு ஜெகா ராவ் தெரிவித்தார். மேலும் இந்நாட்டில் இந்தியர்களின் மக்கள் தொகை சிறுபாண்மை என்றாலும் நாட்டின் வளர்ச்சிக்கு வழங்கும் பங்களிப்பு பெரிது என எடுத்துரைத்தார் பேராசிரியர் ப.இராமசாமி. பினாங்கு தீவில் நடைபெறும் இந்த விற்பனை சந்தைக்கு இந்தியர்கள் வற்றாத ஆதரவை வழங்கி வருவது பாராட்டக்குறியது என்றார்.
} else {