அலை தடுப்பு மதில் சுவர் மேம்பாட்டுத் திட்டம் இந்த ஆண்டின் இறுதியில் நிறைவுப்பெறும்.

Admin

 

ஜார்ச்டவுன் – ஜாலான் துன் சைட் ஷெ பரக்பாவில் 570 மீட்டர் தூரம்   அலை தடுப்பு மதில் சுவர் மேம்பாட்டுத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்ப்புற & கிராமப்புற மேம்பாட்டு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோவின் கூற்றுப்படி, இந்த திட்டம் பினாங்கு வட கடற்கரை மேம்பாட்டு வீயூகத் திட்டத்தில் வரையறுக்கப்பட்ட 14 திட்டங்களில் ஒன்றாகும்.

“2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, இங்குள்ள அலை தடுப்பு மதில் சுவர் பாழடைந்த நிலையில் இருப்பதோடு, அதனால் இனிமேல் அலைகளைத் தாக்கத்தை ஏற்க முடியாது என கண்டறியப்பட்டது.

எனவே, அலை தடுப்பு மதில் சுவரை வலுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டன.அதே நேரத்தில், பயன்படுத்தப்படும் முறைகள் மற்றும் பொருட்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் தரம் மற்றும் விதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

“இந்த அலை தடுப்பு மதில் சுவர் திட்டத்திற்கான ரிம2.2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை பினாங்கு மாநகர் கழகம் வழங்கியுள்ளது. மாநில அரசு மற்றும் தின்க் சிட்டி இணை ஆதரவில் இத்திட்டம் குறித்த விரிவான ஆய்வு மற்றும் திட்டம் செயல்பாடு நடத்த ரிம1.5 மில்லியன் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.

பினாங்கு மாநகர் கழக மேயர் டத்தோ இயூ துங் சியாங்; திங் சிட்டி தலைமை நிர்வாக அதிகாரி அம்டான் அப்துல் மாஜிட்; முதல்வர் அலுவலக வாரியத்தின் (சி.எம்.ஐ) துணை பொது மேலாளர் பாரதி; எம்.பி.பி.பி பொறியியல் துறை இயக்குநர், ராஜேந்திரன் மற்றும் தொடர்புடைய திட்டங்களுக்கான ஆலோசனை நிபுணர்கள் ஆகியோர் வருகையளித்தனர்.

மேலும் கருத்து தெரிவித்த ஜெக்டிப், பாடாங் கோத்தா லாமாவுக்கு அருகில் உள்ள ஜாலான் துன் சைட் ஷெ பரக்பா  நடைபாதையும் தற்போது நிறைவடைந்து வருவதாக தெரிவித்தார்.

“இதுவரை ஏறக்குறைய 50 சதவீதம் (திட்ட முன்னேற்றம்) நிறைவடைந்துள்ளது, இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இன்று உலகெங்கும் இத்தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டாலும், இந்த திட்டம் திட்டமிட்ட அட்டவணைப்படி மேற்கொள்ளப்படுகிறது.

“மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையும் போது,  இத்தளத்தின்    இயற்கை காட்சிகளை இரசிக்க பொதுமக்கள் வெகுவாக வருகையளிப்பர்,” என ஜெக்டிப் நம்பிக்கை தெரிவித்தார்.

அலை தடுப்பு மதில் சுவர் மேம்பாட்டுத் திட்டத்தை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் பார்வையிட்டார்

இந்த திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீடு ரிம140 மில்லியன் ஆகும். இது ஜார்ஜ்டவுன் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கழகம் (ஜி.டி.சி.டி.சி) முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிடையில், கோவிட் -19 தடுப்பூசி திட்டம் இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஜெக்டிப் கூறினார்.

எனவே, 200 க்கும் மேற்பட்ட தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு உதவ தயாராக உள்ளனர்.

இருப்பினும், அவர் இலக்கு குழு பற்றியும் தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின்  கூடுதல் விவரங்களை பற்றியும் கேள்விகளை  எழுப்பினார்.

“ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், ஐந்து வகையான தடுப்பூசிகள் உள்ளன, அவற்றில் ஒன்று ஃபைசர் தயாரிப்பாகும்.

“இருப்பினும், போடப்படும் தடுப்பூசியின் பக்க விளைவு குறித்து அமைச்சகத்திடமிருந்து எவ்வித விளக்கமும் இல்லை.

“இந்த மாத இறுதியில் செயல்படுத்தப்படும் நோய்த்தடுப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு நம்பிக்கை உண்டாக்குவதற்கு கூடுதல் தகவல்கள் இருக்க வேண்டும்”, என ஜெக்டிப் கோரிக்கை விடுத்தார்.