பிறை – ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் இந்து மதம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமின்றி இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பல சமூகநலத் திட்டங்களையும் வழிநடத்தி வருகிறது. ஆண்டுத்தோறும் இந்த ஆலய நிர்வாகத்தின் கீழ் அரசு சாரா இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள்; வழிபாட்டு தலங்களுக்கான நன்கொடைகள், மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி மற்றும் பல சமூகநல திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது.
சமூகத்திற்குச் சேவை செய்வதில் உறுதியாக உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், மார்ச்,24 அன்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ‘மருத்துவ முகாம் & குடும்ப தினத்தை’ மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தது.
பிறை சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு, பல்வேறு சமூக நிகழ்ச்சிகள் மற்றும் தொண்டு பணிகளை செயல்படுத்துவதில் தொடர்ந்து அர்ப்பணித்து வரும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தைப் பாராட்டினார்.
“இந்த நிகழ்ச்சியைப் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும், பிறை சட்டமன்ற உறுப்பினராக நான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும்.
“இந்த நிகழ்ச்சியில் பிறை குடியிருப்பாளர்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொள்வது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகத் திகழ்கிறது.
“மேலும், இம்மாதிரியான நிகழ்ச்சிகள் பொது மக்களிடையே உடல் வலிமையுடனும், மன ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கான விழிப்புணர்வை மேலோங்க வழிவகுக்கிறது.
“மருத்துவ முகாமில், இரத்த சர்க்கரை பரிசோதனைகள், பல் பரிசோதனைகள் மற்றும் இரத்த தானம் போன்ற சுகாதார பரிசோதனைகள் இடம்பெற்றது,” என்று சுந்தராஜு முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபரிடம் கூறினார்.
“எட்டாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இம்முறை 30 அரசு சாரா இயக்கங்கள் கைகோர்த்து ஒன்றிணைந்திருப்பது பாராட்டக்குரியது. இன்னும் வரும் காலங்களிலும் அதிகமான அரசு சாரா இயக்கங்கள் சமூகநல வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இதில் இணைய வேண்டும்,” என ஆலயத்தின் தலைவர் மேஜர் எம்.சேகரன் தெரிவித்தார்.
“இந்த நிகழ்ச்சி வழக்கமாக ஆண்டின் நடுப்பகுதியில் ஏற்பாடு செய்வோம், ஆனால் இம்முறை, ஆலயத்தின் மறுசீரமைப்புக் காரணமாக இது முன்னதாகவே நடத்தப்பட்டது.
“எங்கள் தொகுதியின் பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகுன்,” என்று சேகரன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் சார்பாக, ஆதரவற்றோருக்கு மொத்தம் 10 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, சமையல் போட்டி, ஆரம்பப்பள்ளி மாணவர்கள் இடையிலான கயிறு இழுக்கும் விளையாட்டுப் போட்டி, குழந்தைகளுக்கான வர்ணம் தீட்டும் போட்டு போன்ற நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றன.