செபராங் ஜெயா – நவராத்திரி விழாவை முன்னிட்டு மலேசிய இந்துதர்ம மாமன்றம், பினாங்கு அருள்நிலையம் (தர்மா ஜூனியர் கிளப்) சிறுவர்களுக்கான மாறுவேடப் போட்டியை செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் இனிதே நடைப்பெற்றது.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் நான்கு வயது முதல் 12 வயது சிறுவர்கள் கலந்து கொண்டு தனது படைப்பாற்றலை நிரூபித்தனர். சிறுவர்கள் அனைவரும் முப்பெரும் தேவியர்களாகவும் முருகனாகவும் சிவப்பெருமானாகவும் வேடமிட்டு அவரவரின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
“சிறுவர்களிடையே புராணக்கதைகளைப் புகட்டவும் இந்து சமயத்தையும் அவர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது,” என மலேசிய இந்துதர்ம மாமன்றம், பினாங்கு அருள்நிலையத் தலைவர் ந.தனபாலன் தமதுரையில் குறிபிட்டார். மேலும், இன்றைய சிறுவர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுப்படாமல் இருக்கவும் இறைநம்பிக்கையைத் தூண்டவும் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் அவர்களை நல்வழிப்படுத்த வித்திடும் என அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மலேசிய இந்துதர்ம மாமன்றம், பினாங்கு அருள்நிலைய ஆலோசகர் டாக்டர் குணசேகரன், அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத் தலைவர் அமரேசன், ஆலயத் தலைமை அர்ச்சகர் நாகேந்திரன் குருக்கள் மற்றும் மலேசிய இந்துதர்ம மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறுவர்களுக்கான மாறுவேடப் போட்டியில் ரேனுகாம்பிகை (வயது 6), வசந்த் ரேவிட் (வயது 6) மற்றும் சுதோஷன் அலாபா (வயது 10) தத்தம் ஆகியோர் முதல்நிலையில் வெற்றி வாகை சூடினர்.
இதனிடையே, 18 வயது மேற்பட்ட இளைஞர்களுக்கு நவராத்திரி இளங்கலை போட்டி நவராத்திரி முதல்நாள் நடைபெற்றது. இதில் 110 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பவானி சுப்பிரமணியம் வெற்றி வாகை சூடினார்.