பிறை – பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான நன்னெறி மற்றும் இந்து சமயப் புதிர்ப்போட்டி பிறை, ஜாலான் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் மற்றும் பினாங்கு இந்து தர்ம மாமன்ற இணை ஏற்பாட்டில் இனிதே நடைபெற்றது.
“இந்து சமய வளர்ச்சிக்கு தமிழ்ப்பள்ளிகளில் நடத்தப்படும் சமயப்
போதனைகள் மாணவர்களுக்கு சிறந்த வழிக்காட்டியாகத் திகழ்கிறது. ஆலய சார்பில் அர்பணிப்புகளை வழங்கிய சமய ஆசிரியர்கள் மற்றும் கலை, கலாச்சார பொறுப்பு ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் பல வகையில் பங்களிப்பை வழங்கிய அரசு சாரா இயக்கங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்,” என ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத் தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் தமதுரையில் தெரிவித்தார்.
இந்த ஆலய நிர்வாகம் வருடந்தோறும் ரிம3லட்சம் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறது. இந்நிகழ்வில் ஆலய நிர்வாகம் ஏற்பாட்டில் உயர்க்கல்வி மையங்களில் மேற்கல்வி தொடரும் 42 மாணவர்களுக்கு தலா ரிம1,000 சன்மானமாக வழங்கியது.
இந்நிகழ்வில் உடன் உரையாற்றிய பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் எஸ்.சிங்காரவேலு தமதுரையில், மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி கல்வி, நன்னெறி மற்றும் இந்து சமய வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் பிறை, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் சேவை அளப்பரியது என்றும், இதன் வாயிலாக தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமய நிகழ்வுகள் நடத்த பெரும் உறுதுணையாக இருக்கிறது. மேலும், மாணவர்களிடையே நல்லொழுக்கம், சமய விழிப்புணர்வு அதிகரிக்கவும் வழிவகுக்கிறது என கூறினார்.
மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த நன்னெறி மற்றும் இந்து சமயப் புதிர்ப்போட்டியில் புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி வெற்றி வாகைச்சூடி சுழற்கிண்ணம் மற்றும் ரொக்கப்பணத்தை வென்றது. இரண்டாவது நிலையில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மற்றும் மூன்றாவது நிலையில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி வெற்றிப் பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களாக பிறை, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத் துணை தலைவர் மேஜர் சேகரன், மலேசிய இந்து தர்ம மாமன்ற தேசிய தலைவர் ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என 500க்கு மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்துதர்ம மாமன்றம் மற்றும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் ஆதரவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பினாங்கில் அமைந்திருக்கும் 28 தமிழ்ப்பள்ளிகளிலும் சமய வகுப்புகள் நடைபெறுகின்றன.
இப்புதிர்ப்போட்டி படிநிலை 1, படிநிலை 2 என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்த இரு பிரிவுகளிலும் பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளில் இருந்து 300 மாணவர்கள் போட்டியில் பங்கெடுத்தனர். இந்நிகழ்வில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்குப் பிரத்தியேகமாக வர்ணம் தீட்டும் போட்டியும் இடம்பெற்றது.
“இப்புதிர்ப்போட்டியில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் மாமன்றம் தயாரித்து பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ள 4 இந்து தர்ம பாடநூல்களையும் பயிற்றிகளையும் (modules) அடிப்படையாகக் கொண்டு கேட்கப்படும். இதன் மூலம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்து மதத்தை பற்றி அறிந்துகொள்ள சிறந்த களமாக அமைகிறது,” என பினாங்கு மாநில இந்துதர்ம மாமன்றத் தலைவர் என்.எஸ் தனபாலன் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் மேலும் தெரிவித்தார்.
முதல் முறையாக மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இந்து சமய அடிப்படையிலான புதிர்ப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.