ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் விவகாரத்தில் சமரசம் காட்டப்படாது – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – மாநில அரசு ஊழியர்களிடையே ஊழல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் அதிகார துஷ்பிரயோகம், இலஞ்ச ஊழல் சம்மந்தமான நடவடிக்கைகள் குறித்து சமரசம் காட்டாது, மாறாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், தி டோப் அரங்கத்தில் நடைபெற்ற பொதுப்பணி ஊழியர்களுடனான சந்திப்புக்கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்தினார்.

“மாநில அரசு, தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டம் 2019-2023க்கு இணங்க மாநில நிர்வாக விவகாரங்களில் குறிப்பாக  ஊழல் உள்ளடக்கிய நடவடிக்கைகள் குறித்து தீவிர கண்காணிப்பை மேம்படுத்தும். இதன் வாயிலாக மாநில அரசுப் பணியின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த முடியும்.

எனவே கடந்த 2021 ஜூலை,31  அன்று மாநில செயற்குழு  மாநில அளவிலான ஊழல் எதிர்ப்பு வாரியம்(OACP) தொடங்கி வருகின்ற 2021 முதல் 2024- ஆம் ஆண்டுக்குள் ஊழல் அற்ற  மாநிலத்தையும் நேர்மை, வெளிப்படை மற்றும் ஆற்றல் கொண்ட சமூகத்தை உருவாக்க இலக்கு கொண்டு செயல்படுகிறது.

அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள், அரசு ஊழியர்கள் உட்பட,  முழு நிர்வாகத்திலும் ஊழல் அபாயத்தைக் குறைக்க ஒருமைப்பாடு மற்றும் நெறிமுறைகள் பின்பற்றுவது அவசியம் என்று கொன் இயோவ் கூறினார்.

பினாங்கு மாநில பொதுப்பணி ஊழியர்கள் இலஞ்ச ஊழலை எதிர்த்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதன் மூலம் மாநில அரசின் கொள்கையைப் பின்பற்றி செவ்வென கடமையாற்ற வழிவகுக்கும், என்றார்.

“பொதுப்பணி ஊழியர்களுடனான சந்திப்புக்கூட்டம் மாநில தலைமைத்துவம் மற்றும் அரசு துறைகளுடன் ஒருங்கிணப்பு நல்குவதற்குச் சிறந்த தலமாக அமைகிறது. மேலும், இந்த சந்திப்புக் கூட்டத்தில் முக்கியமான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அறிவிப்பதன் வாயிலாக மாநில அரசின் குறிக்கோள் அடைவதற்குத் துணைபுரிகிறது, என்றார்.

மாநிலச் செயலாளர், டத்தோ டாக்டர் அஹ்மத் ஜைலானி முஹம்மது யூனுஸ் தனது உரையில், அரசு ஊழியர்கள் டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்திப் பொதுப்பணி  சேவைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங்; மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ஹஜி அமாட் சாக்கியுடின்; இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; ஆட்சிக்குழு உறுப்பினர்கள்; சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

வருகின்ற ஏப்ரல்,1-ஆம் நாள் தொடங்கி மலேசியா எண்டமிக் கட்டத்தில் நுழையும் வேளையில் பினாங்கு பொதுப்பணி ஊழியர்கள் உடல் மற்றும் மன ரீதியில் தயார் நிலையில் இருந்து சிறந்த சேவை வழங்க வேண்டும்.

மாநில அரசு கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தின் போது அதன் பரவலைக் கட்டுப்படுத்த பல அணுகுமுறைகள் மற்றும் திட்டங்களைக் கையாண்டது.

மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் கீழ் மாநில அளவிலான தடுப்பூசி மையம் தொடங்கிய முதல் மாநிலமாக பினாங்கு திகழ்கிறது. அதுமட்டுமின்றி, கோவிட்-19 அவசர தொடர்பு மையம் மற்றும் ‘Penang COVID-19 Unified Command Centre(PUCC) நிறுவி பொது மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இலக்கு குழுவினருக்கு நிதியுதவி, கல்வி உபகரணங்கள் மற்றும் அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டன.