செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர்களாக 6 புதிய முகங்கள் உட்பட மொத்தம் 24 பேர் இந்த ஆண்டு 1 ஜனவரி முதல் டிசம்பர் 31, 2025 வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் முன்னிலையில் கவுன்சிலர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இந்த 24 முகங்களில் மூன்று இந்தியர்களான பொன்னுதுரை அந்தோனி ஸ்ரீனிவாசகம், லிங்கேஸ்வரன் சர்மார் மற்றும் பிரதீப் குமார் காளிதாசன் மீண்டும் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், முதலாம் துணை முதலமைச்சர் டத்தோ டாக்டர் முகமது அப்துல் ஹமீட், எம்.பி.எஸ்.பி மேயர், டத்தோ ஹாஜி படேருல் அமீன்; ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லாய்; வீடமைப்பு & சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ ஹாஜி படேருல் அமின் பதவிப் பிரமானம் எடுத்துக் கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார். கவுன்சிலர்கள் எம்.பி.எஸ்.பி உடன் இணைந்து பொது மக்களின் நலனுக்காக சிறந்த சேவையை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், அனைத்து புதிய கவுன்சிலர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு இந்த ஆண்டு புதிதாக நியமிக்கப்பட்ட எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்கள் சிறந்த மற்றும் தரமான சேவை அளிப்பர் என
எதிர்பார்ப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் கூறினார்.
“2025 ஆம் ஆண்டு, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளில் உலகளாவிய மாற்றங்களால் குறிப்பிடத்தக்க மற்றும் உயர் தாக்க சவால்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“கடந்த செப்டம்பரில், செபராங் பிறையில் கடுமையான புயல் தாக்கி, இதனால் அதிகமான மரங்கள் விழுந்தன. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ வாய்ப்புள்ளது. மேலும், அனைத்து எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்களும் அவர் தம் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“இந்தத் தடுப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மரங்கள் விழும் அபாயங்களைக் குறைக்க முற்படும்.
“மேலும், பல்வேறு கட்சிகளில் இருந்து நியமிக்கப்பட்ட கவுன்சிலர்கள், பினாங்கில் உள்ள ஊராட்சி அதிகாரிகளுக்குச் சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக ஆலோசனைகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வர் என்று நம்புகிறேன்,” என ஹெங் கூறினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட 24 கவுன்சிலர்களுக்கும் சாவ் வாழ்த்துத் தெரிவித்ததுடன், பெருநிலத்தில் உள்ள மக்களுக்குச் சேவை செய்ய தங்கள் கடமைகளை விடாமுயற்சியுடன் திறம்பட செய்யுமாறு வலியுறுத்தினார்.
“முன்னாள் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்களின் சிறந்த சேவைக்கும் பங்களிப்பிற்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்,” என சாவ் குறிப்பிட்டார்.
பினாங்கு அரசாங்கம் மற்றும் எம்.பி.எஸ்.பி இன் கொள்கைகளுக்கு இணங்கி, செபராங் பிறையில் உள்ள மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு உள்ளூர் கவுன்சிலர்களிடம் சாவ் கேட்டுக்கொண்டார்.
கவுன்சிலர்களால் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் மக்கள் நலனுக்காகவும், மாநில அரசாங்கத்தின் இலக்கு மற்றும் பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வைக்கு இணங்கி செயல்படும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கவுன்சிலர்களுக்கு நினைவூட்டினார்.
“இந்த ஆண்டு நியமிக்கப்பட்ட கவுன்சிலர்கள் முறையான நடைமுறைகளைக் கடைபிடிக்கும் போது செயல்முறைகளை எளிதாக்கி அதனை விரைவுபடுத்துவர் என்று நான் நம்புகிறேன்.
“பணிகளில் தாமதம் செய்வதையோ அல்லது தாமதப்படுத்துவதையோ தவிர்க்கவும், இது போன்ற செயல்கள் பினாங்கு அரசாங்கம் மற்றும் எம்.பி.எஸ்.பி வழங்கும் நிர்வாகத்தின் தரத்தைப் பிரதிபலிக்கின்றன,” என்று சாவ் கூறினார்.
கவுன்சிலர்கள் முன்னோக்கிச் சிந்திப்பவர்களாகவும், ஆக்கப்பூர்வமாகவும், புதுமையாகவும், போட்டித்தன்மையுடனும் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.
இந்த குணங்கள், ஒட்டுமொத்த பினாங்கின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய நுண்ணறிவு யோசனைகளை உருவாக்குவதற்கு முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டார்.