எம்.பி.பி.பி சேவையை மேம்படுத்த PEARL – One Touch Penang செயலி அறிமுகம்

Admin

ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் PEARL – One Touch Penang செயலியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். நாட்டிலேயே தனது சொந்த இ-வாலட் அம்சங்களை வழங்கும் முதல் ஊராட்சி மன்றம் என்ற வரலாற்றை எம்.பி.பி.பி பதிவு செய்துள்ளது

இந்தச் செயலி மாநிலத்தில் உள்ள மக்களுக்கான எம்.பி.பி.பி சேவையின் தரத்தை மேம்படுத்த, இ-வாலட் அம்சங்கள் மற்றும் இணக்கமான மொபைல் பயன்பாடு கூறுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.பி மேயரான டத்தோ இயூ துங் சியாங், அவரது தலைமையின் கீழ், இந்த ஊராட்சி மன்றம் இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியது உட்பட பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது என்பது பாராட்டக்குரியது என முதல்வர் தெரிவித்தார்.

இந்த எம்.பி.பி.பி முன்முயற்சி தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்கும் பினாங்கு2030 தொலைநோக்கு இலக்கை நோக்கிப் பயணிக்கிறது.

இந்த PEARL – One Touch Penang செயலி ManagePay System Berhad (MPay) ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டது. எம்.பி.பி.பி இன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இந்தச் செயலி ஊன்றுகோளாகத் திகழ்கிறது.

அனைத்து பினாங்கு குடியிருப்பாளர்கள் மற்றும் மாநிலத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கும் எம்.பி.பி.பி இன் ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு இந்தச் செயலி omni-channel எனும்
ஒரு நிறுத்த மையமாக செயல்படுகிறது.

PEARL – One Touch Penang எனப்படும் PEARL Wallet எம்.பி.பி.பி சேவை மட்டுமின்றி அச்செயலியைப் பயன்படுத்தும் வணிகர்களுடனும் ரொக்கமற்ற பரிவர்த்தனையைச் செய்ய அனுமதிக்கிறது.

“இன்று தொடக்கவிழாக் கண்ட PEARL – One Touch Penang செயலி அதன் முதல் கட்டமாக பயன்பாட்டு கட்டணங்கள், தொலைத்தொடர்பு கட்டணம் செலுத்துதல், ஜார்ச்டவுன் லிங்க் பைக் முன்பதிவுகள், காவல்துறை, மருத்துவமனை, தீயணைப்பு நிலையம் போன்ற அவசரகால சேவைகளை எளிதாக அணுகுவதற்கானக் கூறுகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

“இரண்டாம் கட்டமாக இச்செயலியில் பினாங்கு ஸ்மார்ட் வாகன நிறுத்துமிடம் உட்பட, பல சேவைகள் புதுப்பிக்கப்பட்டு, அவ்வப்போது தானாகவே நேரடியாக இந்தப் பயன்பாட்டில் இணைக்கப்படும்.

“பினாங்கு வாழ் மக்கள் PEARL – One Touch Penang செயலியைப் பதிவிறக்கம் செய்து அன்றாடத் தேவைக்கானப் பயன்பாட்டுக்கு அனுகலாம்,” என முதல்வர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.பி.பி.பி செயலாளர் டத்தோ இராஜேந்திரன், எம்.பி.பி.பி கவுன்சிலர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.