பினாங்கு தேசிய புற்றுநோய் கழகம் ஒன்பதாவது முறையாக ‘Relay for Life’ என்ற பிரச்சாரம் மற்றும் நிகழ்வை ஏற்று நடத்துகிறது. இந்நிகழ்வு 15-6-2013 –ஆம் நாள் மாலை மணி 6.00 முதல் மறுநாள் காலை மணி 10.00 வரை வேடிக்கை நிறைந்த, சமூகம் சார்ந்த நிகழ்ச்சியாக 16 மணி நேரத்திற்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 15-6-2013 –ஆம் நாள் பினாங்கு நகராண்மைக் கழக இளைஞர் பூங்காவில் பதிவுசெய்ய வேண்டும்.
இந்நிகழ்ச்சியின் தலையாய நோக்கமானது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த இன்னல்களிலிருந்து மீளச்செய்வதும் புற்றுநோய் ஏற்படாமல் இருப்பதற்குச் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினைப் பின்பற்ற ஊக்குவித்தலாகும்.
இந்நிகழ்ச்சிக்கு ஏறக்குறைய 2000 பினாங்கு வாழ் மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கேற்பாளர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஆதரவு நல்குவதோடு நிதி திரட்டுவதற்கும் உதவி கரம் நீட்ட வேண்டும்.
‘ரிலே’ எனப்படும் புற்றுநோய் பிரச்சாரமானது விளையாட்டுகள், இசை நேரலை, கண்காட்சிகள், ஆரோக்கியத் திரைக்காட்சி, உணவுக் கடைகள், மற்றும் பரிசுகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளின் வாயிலாக வெவ்வேறான வயது மற்றும் வாழ்க்கைப் பின்னணிக் கொண்ட மக்களை ஒரு வழி பாதையில் பயணிக்கச் செய்கிறது.
பினாங்கு தேசிய புற்றுநோய் கழக உறுப்பினர் முய் சியூ கூன், நம் அன்றாட வாழ்க்கையில் புற்றுநோய் பற்றிய பயம், அறியாமையை விட்டொழித்து பரஸ்பர போராட்டத்தில் ஒன்றிணைந்து போராடுவோம் என்றார்.
இந்நிகழ்ச்சியை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அணிச்சல் வெட்டி தொடக்கி வைப்பார். இத்தொடக்க விழாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களோடு ஒன்றிணைந்து முதல்வரும் மக்களும் பேரணியாக நடந்து தங்களின் அன்பை வெளிப்படுத்துவர்.
நல்வாழ்வு, சமூகப் பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய பீ பூன் போ அவர்கள் இந்நிகழ்ச்சி இனிதே நடைபெறுவதற்கு ஆதரவு நல்கிய வாவாசான் திறந்தநிலை பல்கலைக்கழகம், IJM நில பெர்ஹாட், SLE எண்டர்டெயின்மெண்ட், ஸ்டார் குரூஸ், சைம் டார்வி, மற்றும் பினாங்கு நகராண்மைக் கழகம் ஆகியோருக்குத் தம் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.