பல ஆண்டு காலமாக மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் இந்திய மக்களில் பலர் இன்னமும் அடையாள ஆவணங்களான பிறப்புப் பத்திரம், அடையாள அட்டையின்றி குடியுரிமை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த இன்னல்களுக்கு விடிவெள்ளியாகப் பினாங்கு மாநில அரசு குடியுரிமை உதவிக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
குடியுரிமை இல்லாத பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கும் பிறப்புப்பத்திரம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக இந்தப் பிள்ளைகளினால் பள்ளிக்கூடங்களிலும் தங்களைப் பதிந்து கொள்ள முடியாமல் போகும் அவல நிலை ஏற்பட்டுத் துன்பத்தில் மூழ்கின்றனர். இவர்களின் துன்பத்தைப் போக்கி இப்பிரச்சனைக்குச் சிறந்ததொரு தீர்வு காண ஐந்து சிறப்பு அதிகாரிகளைக் கொண்ட குடியுரிமை உதவிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி தெரிவித்தார்.
நாடாளுமன்ற அறிக்கையின்படி 2008-ஆம் ஆண்டிலிருந்து 2012-ஆம் ஆண்டுவரை குடியுரைமைக்காக விண்ணப்பித்த 62,309 பேர்களில் 29,848 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என ஜனநாயக செயற் கட்சியின் தேசிய துணைத் தலைவரான திரு.குலசேகரன் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங்குடன் கொம்தாரில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் குறிப்பிட்டார். அவர்களில் அதிகமான இந்தியர்களே இன்னும் குடியுரிமை பெறாமல் இருக்கின்றனர் எனக் கூறினார்.
எனவே, இந்த நாடற்றவர்களாக வாழ்ந்து வரும் இந்திய மக்களுக்கு உதவும் வகையில் பினாங்கு மக்கள் கூட்டணி அரசு இந்தச் சிறப்புக் குழுவை நியமித்திருப்பதாகப் பினாங்கு முதல்வர் லிம் கூறினார். இக்குழு நாட்டில் எத்தனை பேர் குடியுரிமையில்லாமல் இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள நாடு தழுவிய நிலையில் ஆய்வு ஒன்றை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம், இக்குடியுரிமையில்லாப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கருத்துரைத்தார்.