பாகான் டாலாம் – பினாங்கு மாநில அரசு அண்மையில் அறிவித்த மக்கள் உதவித்திட்டம் 3.0 வழி கோவிட்-19 பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு பேருதவியாக அமையும். மத்திய அரசு அண்மையில் அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி 2.0) காரணமாக மாநில அரசு மக்களுக்கு உதவும் நோக்கில் இவ்வுதவித்திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு அரசியல் பின்னணியைக் கருதாமல் இம்மாநிலத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா ரிம30,000 நிதி ஒதுக்கீடு அறிவித்திருந்தது. இதன் தொடர்பாக, முத்துச்செய்திகள் நாளிதழ் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டியிடம் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது.
“பினாங்கு மாநில அரசு அறிவித்த மக்கள் உதவித்திட்டத்தின் வாயிலாக உரிமம் இன்றி வியாபாரம் செய்யும் அங்காடி வியாபாரிகள், உணவகங்களில் பாத்திரம் கழுவும் பணிப் புரிவோர் போன்ற தினசரி வருமானம் இன்றி தவிக்கும் தரப்பினருக்கு உதவ இணக்கம் கொண்டுள்ளதாக,” பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி குறிப்பிட்டார்.
“உரிமம் இன்றி தவிக்கும் சிறுவியாபாரிகளுக்கு இம்மாதிரியான உதவிகள் வழங்குவதன் மூலம் அவர்கள் செபராங் பிறை மாநகர் கழகத்தில் தங்களின் வியாபார உரிமம் பெற விண்ணப்பிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறது,” என சத்தீஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 1.0 & 2.0 அறிவிக்கப்பட்டதில் இருந்து ஸ்பா, சிகை அலங்கார கடை, முடித் திருத்தம் கடை உரிமையாளர்கள் வருமானம் இன்றி திண்டாடுகின்றனர். இம்முறை மாநில அரசு அறிவித்த மக்கள் உதவித்திட்டத்தில் இவர்களை கருத்தில் கொண்டுள்ளது.
மாநில அரசு பதிவுப்பெற்ற ஸ்பா, சிகை அலங்கார கடை, முடித் திருத்தம் கடை உரிமையாளர்களுக்கு ரிம 500 வழங்குவதை சட்டமன்ற உறுப்பினர் வரவேற்றார்.
வாகனம் கழுவும் பணியில் ஈடுப்படும் பணியாளர்களுக்கு தினசரி வருமானம்தான் வாழ்வாதாரம். ஆனால், பி.கே.பி காலக்கட்டத்தில் வியாபாரத்தை தொடர முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை (எஸ்.ஓ.பி) நிர்ணயித்து வியாபாரத்தை தொடங்க வழிவகுக்க வேண்டும் என்ற கோரிக்கையை
சட்டமன்ற உறுப்பினர் முன்வைத்தார்.
இதனிடையே, கோவிட்-19 தாக்கதால் வழிப்பாட்டு தளங்களும் வருமானம் இன்றி தத்தளிக்கிறனர். அர்ச்சகரின் வருமானம், வழிப்பாட்டு தளத்தின் பராமரிப்புப் பணி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மாநில அரசு வழங்கிய ஒதுக்கீட்டில் இருந்து அனைத்து இனங்களின் வழிபாட்டு தளங்களுக்கும் உதவிக்கரம் நீட்டவுள்ளதாக சத்தீஸ் குறிப்பிட்டார்.
மாநில அரசு வழங்கிய மக்கள் உதவித் திட்டம் 1.0 & 2.0 மக்களுக்கு முறையாக சென்றடைந்துள்ளதாக கூறினார். எனினும், இணைய வசதி இன்றி கிராமப்புறங்களில் வாழ்வோருக்கும் இந்த உதவித்தொகைகள் சென்றடைவதை மாநில அரசு உறுதிச்செய்ய வேண்டும்.
கோவிட்-19 சங்கிலியை உடைக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வும் மேலோங்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) முறையாகவும் கட்டாயமாகவும் பின்பற்றப்படுவதை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், அனைவரும் ஆரோக்கிய உணவு முறையை உண்ணுதல் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முனைப்புக்காட்ட வேண்டும் என சத்தீஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.