சமயம் பல்லின மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் – சாவ்

img 20240825 wa0013

பாகான் – “மலேசியர்கள் பல்லின மக்களுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கு சமயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து சமயப் போதனைகளும் நமது தினசரி வாழ்க்கையில் சகோதரத்துவம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மற்றும் நன்னெறிப் பண்புகள் பின்பற்றி நல்லிணக்கத்தை மேலோங்க வழி வகிக்கிறது.

“சமயம் என்பது பிளவுக்கான அறிகுறி அல்ல மாறாக ஒற்றுமையின் சின்னம்,” என மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவையும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இணை ஏற்பாட்டில் 46-வது திருமுறை ஓதும் விழாவிற்கு சிறப்பு வருகை மேற்கொண்ட ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் இவ்வாறு கூறினார்.

மாநில அரசாங்கம் சமயம் மற்றும் சமூகநலன் மிக்க திட்டங்களுக்குத் தொடர்ந்து நல்லாதரவு அளிக்கும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான இராயர் கூறினார்.

மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை சமயம் மட்டுமின்றி பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் வகையிலும் பல நிகழ்ச்சிகள், வகுப்புகள் மற்றும் பட்டறைகள் வழிநடடுத்துவது பாராட்டக்குரியதாகும்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் தேவாரம் மற்றும் சங்கீதம் இரண்டையும் கற்றுக்கொள்வதில் சாதனைகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டாட நாங்கள் கூடுகிறோம், அவை மாணவர்களிடையே முழுமையான வளர்ச்சியை வளர்க்கின்றன.

 

இது மாணவர்களின் இசைத் திறனை மேம்படுத்துவதோடு, கலாச்சார விழிப்புணர்வை ஊக்குவித்தல், ஒழுக்கத்தை வளர்த்தல் மற்றும் ஆழ்ந்த பக்தி உணர்வை வளர்த்தல் போன்ற அம்சங்களுடன் மாணவர்களை  வளப்படுத்துகிறது. உண்மையில், ஒரு சமூகம் ஒரு தொலைநோக்குடனும் ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் என்ற உணர்வைப் பிரதிபலிக்கும், இதுபோன்ற நம்பிக்கைக்குரிய நிகழ்ச்சிகள்”, என தமதுரையில் அவர் குறிப்பிட்டார்.

 

மலேசிய இந்து சங்கம் மலேசியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, மேலும் இந்துக்களின் ஆன்மீக, தார்மீகம், கலாச்சாரம் மற்றும் சமூக நலன்களை மேம்பாடு, கல்விப் புத்தாக்கம் மற்றும் மத வளர்ச்சி என சிறந்த சேவையை நல்கி வருவதை சாவ் பாராட்டினார்.

 

இந்தப் பேரவை தொடர்ந்து சமூகத்திற்குச் சேவை ஆற்றுவது சாலச்சிறந்தது.

மேலும், மாநில அரசு மலேசிய இந்து சங்கம் பினாங்கு பேரவை, பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம் (PYDC) மற்றும் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (PWDC) ஆகியவற்றுக்கு இடையே மேலும் ஈடுபாடுகள் மற்றும் ஒத்துழைப்புகளை வலுவாக்க இணக்கம் பூண்டுள்ளது.  இந்த ஏஜென்சிகள் வாயிலாஜ விரிவான ஆலோசனைகள் மற்றும் தனிப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வளர்ச்சியை ஆதரிப்பதில் உறுதியாகவும்  இருக்கும். எனவே, இந்திய சமூகம் முன்னேறிச் செல்வதற்கு இது மிகவும் பொருத்தமானதாக திகழும் என்று கொன் இயோவ் நம்பிக்கை தெரிவித்தார். 

 

“சமய வகுப்பு ஒரு மாணவனை சிறந்த பண்புநெறியுடன் வளர்வதற்குத் துணைபுரிகிறது. அதோடு அவர்கள் தீயப் பழக்கங்களில் இருந்து விடுப்படவும் சமயம் ஒரு திறவுக்கோளாகத் திகழ்கிறது,” என்று மலேசிய இந்து சங்கம் பினாங்கு கிளைத் தலைவர் விவேக நாயகன் திரு.தர்மன் தெரிவித்தார்.

 

இந்து சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் நடத்துவதில் மட்டும் உற்சாகம் கொள்ளாமல் ஒன்றுபட்டு வாழ்ந்து இந்து சமயத்தின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும், என்றார்.

 

இதனிடையே, இவ்வாண்டு திருமுறை ஒதும் விழாவில் பினாங்கு மாநிலம் முழுவதும் 3,500 பேர்கள் கலந்து கொண்டனர். மாநில அளவிலான போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதிப்பெற்று தனிநபர் மற்றும் குழு முறையில் தேவாரம் ஓதுதல், பேச்சுப் போட்டி, திருமுறை பதிகப் பாராயணம், பஞ்சபுராணம் என சமயம் போட்டிகள் நடத்தப்பட்டன.

 

மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து திருநீறு பூசி பார்ப்பதற்கே வண்ணமயமாகக் காட்சியளித்தனர்.
பினாங்கு மாநில அளவிலான திருமுறை ஓதும் போட்டியில் 12 வட்டாரப் பேரவையைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற போட்டியாளர்கள் இம்மாநிலத்தைப் பிரதிநிதித்து வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி பத்துமலையில் நடைபெறும் தேசிய ரீதியிலான திருமுறை ஓதும் போட்டியில் கலந்து கொள்வர்.

img 20240825 wa0007

 

இந்து சமயத்தைப் பறைச்சாற்றும் இந்த திருமுறை ஓதும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பங்கேற்பு அதிகரிப்பதைக் கண் கூடாக காண முடிகிறது. 

 

இந்நிகழ்ச்சியில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், மலேசிய இந்து சங்கம் சிவநெறி செல்வர் ஸ்ரீ காசி சங்கபூசன் தங்க கணேசன், ம.இ.கா பினாங்கு கிளைத் தலைவர் டத்தோ தினகரன், பிரதம துறை சிறப்பு அதிகாரி சண்மூக மூக்கன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

 

img 20240825 wa0005

மற்றுமொரு விவகாரத்தில், சரவாக்கில் நடைபெற்ற சுக்மா போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு சன்மானம் அதிகரிக்கும் நோக்கம் குறித்து ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ஆட்சிக்குழு கூட்டத்தில் இதன் தொடர்பாக முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என சாவ் செய்தியாளர் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். முன்னதாக, சுக்மா வெற்றியாளருக்கு ஸ்கிமாஸ் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரிம4,000 சன்மானமாக வழங்கப்படும். இவ்வாண்டு பினாங்கு மாநிலம் 41 தங்கப் பதக்கம் வென்று இலக்கினை அடைந்த வேளையில் சன்மானத்தை அதிகரிக்க மாநில அரசு பரிசீலிக்கும் என சாவ் மேலும் விளக்கினார்.