சமூக இல்லக் குழந்தைகளுடன் தீபாவளி விருந்தோம்பல்

Admin

‘பணம் படைத்தவரிடம் மனம் இருப்பதில்லை;

மனம் படைத்தவரிடம் பணம் இருப்பதில்லை.’

சில சமயங்களில் இக்கூற்று மெய்யாக இருப்பதில்லை என்பதே உண்மை. இதனை நிரூபிக்கும் வகையில் அரசு சார்புடைய பினாங்கு மேம்பாட்டு நிறுவனம் அண்மையில் ஏற்று நடத்திய தீபாவளி விருந்தோம்பலில் ஸ்ரீ சஹயா சமூக இல்லத்தைச் சேர்ந்த 45 குழந்தைகளுக்குப் பல அன்பளிப்புகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது. பாயான் பாருவில் உள்ள பினாங்கு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்ற இவ்விருந்துபசரிப்பைப் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் தலைமை தாங்கினார்.

பினாங்கு மாநில வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வரும் பினாங்கு மேம்பாட்டு நிறுவனம் சமூகச் சேவைகளைச் செய்வதிலும் ஒருபோதும் பின் தங்கவில்லை. இந்நிறுவனத்தால் நவம்பர் 8-ஆம் திகதி கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சஹயா சமூக இல்லக் குழந்தைகளுக்குத் தீபாவளியை முன்னிட்டு பாயான் பாரு சன்ஷயின் பேரங்காடியில் புத்தாடைகள் வாங்கிக் கொடுக்கப்பட்டன என்று இத்தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சியின் தலைவர் திரு மோகன்ராஜ் பெருமையுடன் கூறினார். 1985-ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து     27-ஆம் முறையாக நடைபெறும் பினாங்கு மேம்பாட்டு நிறுவனத்தின் தீபாவளி விருந்துபசரிப்பை ஏற்று நடத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

மக்கள் நலன் பேணும் மக்கள் கூட்டணி அரசின் கொள்கையை ஆதரிக்கும் வண்ணம் ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தீபத்திருநாளை முன்னிட்டு நல்லெண்ணத்துடன் புத்தாடைகளை வழங்கி அந்தப் பிஞ்சு உள்ளங்களுடன் இந்த விருந்துபசரிப்பைக் கொண்டாடி மகிழ்வது மிகவும் பாராட்டுக்குரியதென்று முதல்வர் லிம் தம் உரையில் புகழ்ந்து பேசினார். பல்வேறு சவால்களைத் தாண்டி தங்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்துவரும் பினாங்கு மேம்பாட்டு நிறுவனப் பணியாளர்களுக்கு முதல்வர் இரண்டு மாத ஊக்கத் தொகையை அறிவித்து அங்கு குழுமியிருந்த ஊழியர்களின் பலத்த கைத்தட்டல்களைப் பெற்றுக் கொண்டார். ஆற்றல், பொறுப்பு, வெளிப்பாடு ஆகிய கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டுவரும் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசைப் பின்பற்றி பினாங்கு மக்களைப் பெருமைபடுத்தும் பொருட்டுப் பினாங்கு மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பினாங்கு மேம்பாட்டு நிறுவனம் மாநில அரசுடன் இணைந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

வண்ணமயமான அலங்கரிப்புடன் பினாங்கு மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகம் அழகாகக் காட்சியளித்தது. அழகிய ரங்கோலி கோலத்தின் மேல் ஏற்றப்பட்ட தீபத்திருநாளின் சின்னமான ஒளி மிகுந்த அகல்விளக்குகள் தீபாவளி கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்புச் சேர்த்தது எனலாம். இந்திய பாரம்பரிய பலகாரங்கள் உணவுகளை உண்டு மகிழ்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு முதல்வர் லிம் குவான் எங் தீபாவளி அன்புத்தொகை வழங்கி மேலும் அக்குழந்தைகளை மகிழ்வித்தார். இவ்விருந்துபசரிப்பில், முதலாம் துணை முதல்வர் டத்தோ மன்சோர் ஒஸ்மான், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்களான மதிப்பிற்குரிய பீ பூன் போ, அப்துல் மாலிக் உட்பட, பினாங்கு மேம்பாட்டு நிறுவன உயர் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பகாங் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், பினாங்கு மாநிலத்தின் அதீத மாற்றங்களைக் கண்டு மிகவும் வியப்படைவதாககவும் தாங்கள் வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் கூறினர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான திருமதி நொர்ஷாம் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் பினாங்கு மாநிலத்திற்குச் சுற்றுலா மேற்கொண்டதாகவும் நண்பர் ஒருவர் தன்னையும் தன் குடும்பத்தினரையும் இந்தத் தீபாவளி விருந்துபசரிப்புக்கு அழைத்து வந்ததாகவும் கூறினார். பினாங்கு மாநிலம் முன்பைக் காட்டிலும் தற்பொழுது மிகவும் தூய்மையாகவும் அழகாகவும் இருப்பதாகக் கூறினார். பினாங்கு முதல்வரை நேரில் சந்தித்த அக்குடும்பம் முதல்வருடன் கலந்துரையாடி தங்கள் உள்ளக்களிப்பை வெளிபடுத்தினர். அம்மாதுவின் கடைசி குழந்தையான ஷாரிஃபா என்னும் 7 வயது நிரம்பிய சிறுமி சீனப்பள்ளியில் பயின்று வருவதால், தான் முதல்வரை நேசிப்பதாகவும் தனக்குப் பினாங்கு மாநிலத்தை மிகவும் பிடித்திருப்பதாகவும் சீன மொழியில் கூறியது வியப்படையச் செய்தது. முதல்வருக்குப் பாராட்டுத் தெரிவித்த அக்குடும்பம் நினைவுச்சின்னமாக முதல்வருடன் நிழற்படம் எடுத்துக் கொண்டனர்.

DSC_0104கையில் அன்புத்தொகையுடன் ஸ்ரீ சஹயா சமூக இல்லக் குழந்தைகள். அவர்களுடன் மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங்கும் உயர்மட்டத் தலைவர்களும்