சாவ்ரஸ்தா சந்தை மேம்பாட்டுத் திட்டம்

Admin

பினாங்கு மாநிலத்தில் மிகப் பழமை வாய்ந்த பிரபலமான சந்தைகளில் சாவ்ரஸ்தா சந்தையும் ஒன்றாகும். பல ஆண்டு காலமாகப் பினாங்கு வாழ் மக்கள் சமையலுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், தளவாடப் பொருட்கள், ஆடைகள், காலணிகள் மற்றும் பல தேவையான பொருட்களைத் தரமாகவும்  மலிவான விலையிலும் பெற்றுக் கொள்ள சிறந்த தளமாக அமைந்துள்ளது. இந்தச் சந்தையைத்ன் தர மேம்படுத்த பினாங்கு மக்கள் கூட்டணி அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

சாவ்ரஸ்தா சந்தை மேம்பாட்டுத் திட்டம் 2 ஆண்டு காலக்கட்டத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் வரும் 1-4-2013 –நாள் தொடங்கப்படவுள்ளது. முதலாண்டில் அதாவது 1-4-2013 முதல் 31-3-2014க்குள் வாடிக்கையாளர்களுக்கான வாகனம் நிறுத்தும் இடம் கட்டப்படும். 123 வாகனம் நிறுத்துவதற்கான இடங்களில் ஊனமுற்றோருக்காக 2 சிறப்பு வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதன் மூலம் இச்சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகன நெரிசலைத் தவிர்க்க வழிவகை செய்யும்.

இத்திட்டத்தில் மேம்படுத்தப்படும் சாவ்ராஸ்தா கட்டடத்தில் 295 கடைகள் நிறுவப்படவுள்ளது. அக்கட்டடத்தின் கீழ்த்தளத்தில் 235 கடைகளும் முதல் மாடியில் 60 கடைகளும் அமைக்க இத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரிம 12,190,206.40 செலவில் கட்டப்படவுள்ளது.

சாவ்ரஸ்தா சந்தையில் பல ஆண்டு காலமாக வியாபாரத்  துறையில்  ஈடுப்பட்டிருக்கும்  வியாபாரிகள்  கடந்த   21-3-2013 –ஆம் நாள் கொம்தாரில் நடைபெற்ற இத்திட்டத்திற்கானச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதோடு இத்திட்டத்தை மேற்கொள்வதால் ஏற்படும் அன்றாட வியாபாரச் சிக்கல் மற்றும் இத்திட்டத்தின் வரையறை அனைத்தும் கொம்தார் சட்ட மன்ற உறுப்பினர் இங் வெய் எய்க் மற்றும் பினாங்கு நகராண்மைக் கழக ஆலோசகர் ஒங் ஆ தியோங் அவர்களால் தெள்ளத் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. இத்திட்டத்தை மேற்கொள்வதால் வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அவர்களுக்கான தற்காலிகக் கடைகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர்.