சாவ்ராஸ்தா சந்தையின் தரமேம்பாட்டுப் பணி மார்ச் 2015-இல் நிறைவடையும்

Admin

பினாங்கு மாநிலத்தின் மிகப் பழமை வாய்ந்த பிரபலமான சந்தைகளில் சாவ்ரஸ்தா சந்தையும் ஒன்றாகும். இச்சந்தை 1890ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். பல ஆண்டு காலமாகப் பினாங்கு வாழ் மக்கள் சமையலுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், தளவாடப் பொருட்கள், ஆடைகள், காலணிகள் மற்றும் பல தேவையான பொருட்களைத் தரமாகவும்  மலிவான விலையிலும் பெற்றுக் கொள்ள இச்சந்தை சிறந்த தளமாக அமைந்துள்ளது. இந்தச் சந்தையைத் தர மேம்படுத்த பினாங்கு மக்கள் கூட்டணி அரசாங்கம் மேற்கொண்ட இந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இச்சந்தையின் வியாபாரிகளுடன் கலந்துரையாடலின் மூலம் பெறப்பட்ட இணக்கத்தின் பயனாக இச்சந்தையின் மேம்பாட்டுத் திட்டத்தை கடந்த ஜூன் 15ஆம் திகதி மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இவ்வதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் பினாங்கு நகராண்மைக் கழகத் தலைவரைப் பிரநிதித்து அதன் செயலாளர் திரு அங் ஐங் தாய், கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய தே லாய் எங், பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர் ஹர்விண்டர், அரசுத் துறை அதிகாரிகள், சாவ்ரஸ்தா சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

சாவ்ரஸ்தா சந்தையின் தரமேம்பாட்டுத் திட்டம் 2 ஆண்டு காலக்கட்டத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்முர் நிறுவனம் மேற்கொள்ளும் இத்திட்டத்தில்  169 வியாபாரத்தளங்கள் உட்பகுதியிலும் 66 தளங்கள் வெளிப்பகுதியிலும் மற்றும் 60 தளங்கள் முதலாம் மாடியிலும் அமைக்கப்படவுள்ளது. அதுமட்டுமல்லாது, வாடிக்கையாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு வாகனம் நிறுத்துமிடங்களும் கட்டப்படும். 123 வாகனம் நிறுத்துவதற்கான இடங்களில் ஊனமுற்றோருக்காக 2 சிறப்பு வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதன் மூலம் இச்சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகன நெரிசலைத் தவிர்க்க வழிவகை செய்யும்.

 படம் 1 சாவ்ரஸ்தா சந்தையின் இன்றைய தோற்றம் படம் 1 சாவ்ரஸ்தா சந்தையின் இன்றைய தோற்றம் படம் 1 சாவ்ரஸ்தா சந்தையின் இன்றைய தோற்றம்

படம் 1
சாவ்ரஸ்தா சந்தையின் இன்றைய தோற்றம்

இச்சந்தை 12.1 மில்லியன் ரிங்கிட் பொருட்செலவில் மேம்படுத்தப்படவுள்ளது. மேலும், பாரம்பரிய அம்சங்களையும் பசுமைக் கட்டடக் குறியீட்டையும் அடிப்படையாகக் கொண்டு தரமுயர்த்தப்படவுள்ளது. மலேசியாவின் முதல் ஈரச் சந்தையாக விளங்கும் இச்சாவ்ரஸ்தா சரித்திரப் புகழ்மிக்க கட்டடம் என்றால் அது மிகையாகாது.

சாவ்ரஸ்தா சந்தையில் பல ஆண்டு காலமாக வியாபாரத்  துறையில்  ஈடுப்பட்டிருக்கும்  வியாபாரிகள்  கடந்த   மார்ச் மாதம் கொம்தாரில் நடைபெற்ற இத்திட்டத்திற்கானச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இத்திட்டத்தை மேற்கொள்வதால் வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அவர்களுக்கான தற்காலிகக் கடைகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பிட்ட பின்னர் அனைத்து வியாபாரிகளும் ஒருமித்த மனதோடு இத்திட்டத்தை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்திருந்தனர்.

பினாங்கு மாநில வியாபாரிகள் மற்றும் பயனீட்டாளர்களின் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் பொதுச் சந்தைகளைத் தரமேம்படுத்தி வரும் பினாங்கு நகராண்மைக் கழகத்தின் செயல்திட்டம் மிகவும் பாராட்டுக்குரியது என்று முதல்வர் லிம் தம் சிறப்புரையில் புகழாரம் சூட்டினார். அனைத்துலகத் தரமிக்க மாநிலமாக வேண்டும் என்ற பினாங்கின் குறிக்கோளுக்கேற்ப இச்சந்தை மக்களுக்குப் பயனளிக்கும் பல நவீன வசதிகளுடனும் புதுப் பொலிவுடனும் தரம் உயர்த்தப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

படம்1 மாநில முதல்வரும் பினாங்கு நகராண்மைக் கழக செயலாளரும் இணைந்து சாவ்ரஸ்தா சந்தையின் தரமேம்பாட்டு பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கின்றனர்.
படம்1
மாநில முதல்வரும் பினாங்கு நகராண்மைக் கழக செயலாளரும் இணைந்து சாவ்ரஸ்தா சந்தையின் தரமேம்பாட்டு பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கின்றனர்.