சிறுவர்களிடையே இந்து சமயம் பற்றிய விழிப்புணர்வு மேலோங்க வேண்டும் சத்தீஸ்

செபராங் ஜெயா – நவராத்திரி விழாவை முன்னிட்டு மலேசிய இந்துதர்ம மாமன்றம், பினாங்கு அருள்நிலையம் (இளைஞர் பகுதி) சிறுவர்களுக்கான மாறுவேடப் போட்டியை செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் இனிதே நடத்தியது.

மூன்றுப் பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் நான்கு வயது முதல் 12 வயது சிறுவர்கள் கலந்து கொண்டு தனது படைப்பாற்றலை நிரூபித்தனர். சிறுவர்கள் அனைவரும் முப்பெரும் தேவியர்களாகவும் முருகனாகவும் சிவப்பெருமானாகவும் வேடமிட்டு அவரவரின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

“சிறுவர்களிடையே புராணக்கதைகளைப் புகட்டவும் இந்து சமயத்தையும் அவர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,” என மலேசிய இந்துதர்ம மாமன்றம், பினாங்கு அருள்நிலையத் தலைவர் ந.தனபாலன் தமதுரையில் குறிப்பிட்டார்.

மேலும், இன்றைய சிறுவர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுப்படாமல் இருக்கவும் இறைநம்பிக்கையைத் தூண்டவும் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் அவர்களை நல்வழிப்படுத்த வித்திடும் என அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி; மலேசிய இந்துதர்ம மாமன்ற, பினாங்கு அருள்நிலைய ஆலோசகர் டாக்டர் குணசேகரன்; அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத் தலைவர் அமரேசன், மலேசிய இந்து சங்கம் புக்கிட் மெர்தாஜாம் கிளைத் தலைவர் ஜோன் மற்றும் மலேசிய இந்துதர்ம மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சத்தீஸ் பேசுகையில், சிறுவர்களிடையே இந்து சமயம் பற்றிய விழிப்புணர்வு மேலோங்கவும் அறிந்து கொள்ளவும் இம்மாதிரியானப் போட்டிகள் வழிவகுக்கும், என்றார்.

பினாங்கு இந்துதர்ம மாமன்றம் இப்போட்டியினை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், பிற மொழி பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பாரதியார் போல் வேடமிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் தமிழ் மற்றும் சமயம் மேம்படுத்தப்படுகிறது, என சத்தீஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

சிறுவர்களுக்கான மாறுவேடப் போட்டியில் அ.தர்ஷினி, டர்ஷிகா மற்றும் வசந்த் ரேவிட் தத்தம் ஆகியோர் முதல்நிலையில் வெற்றி வாகைச் சூடினர். சிறுவர்களுக்கான மாறுவேடப் போட்டியில் சுமார் 35 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.