ஜார்ச்டவுன் –பினாங்கு முதலமைச்சர் கார்ப்பரேஷன் (சி.எம்.ஐ) மூலம் நிர்வகிக்கப்படும் பல திட்டங்கள் உண்மையில் தனியார் துறையின் பொது தனியார் கூட்டாண்மை (PPP) முதலீட்டுடன் செயல்படுத்தப்படுகிறது. இது மாநில அரசு செலவினங்களை உள்ளடக்கவில்லை என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
கோத்தா கார்ன்வாலிஸ், சாண்டிலேண்ட் ஃபோர்ஷோர் வீடமைப்புத் திட்டம், ஹம்னா வீடமைப்புத் திட்டம், க்ராக் தங்கும்விடுதி திட்டம், திதியான் சிலாரா புக்கிட் பெண்டேரா (ஹாமிதாட்) திட்டம் மற்றும் டிஜிட்டல் நூலகம் மற்றும் விஸ்மா யீப் சோர் ஈ இன் செயல்பாடு ஆகியவை இதில் அடங்கும்.
மாநில அரசு ஒவ்வொரு பொது தனியார் கூட்டாண்மை திட்டத்திலிருந்தும், அத்திட்டத்தின் அளவு பொருத்து அதன் நில விற்பனை, குத்தகை அல்லது வாடகை மூலம் மட்டுமே வருவாயைப் பெறுகிறது என நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கூறினார்.
“ஒரு திட்டச் செலவு என குறிப்பிடப்படுவது ‘Vot’ மேம்பாட்டின் கீழ் மாநில அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுகிறது.
“முதலீடு என்பது தனியார் துறையால் செயல்படுத்தப்படும் ஒரு ‘கூட்டு முயற்சி’ அல்லது மாநில அரசு செலவினங்களை உள்ளடக்காத PPP இன் திட்டமாகும்,” என்று 15வது சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சரின் தொகுப்புரையில் இதனைத் தெரிவித்தார்.
ஆயர் ஈத்தாம் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங் சூன் சியாங்கின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, சி.எம்.ஐ மூலம் இயக்கப்படும் அனைத்து திட்டங்களிலும், திட்டத்தின் முதலீட்டு செலவை விட வருவாய் குறைவாக உள்ளது என்ற கூற்றுக்கு இவ்வாறு பதிலளித்தார்..
பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான கொன் இயோவ், 2013 முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரை சி.எம்.ஐ நிலத்தின் விற்பனை, குத்தகை மற்றும் வாடகை மூலம் ரிம195 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது என்றும் விளக்கமளித்தார்.
அதே காலகட்டத்தில் 2024 ஆம் ஆண்டு வரை தனியார் துறையின் மொத்த முதலீடு ரிம2.085 பில்லியன் ஆகும். மாநில அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனம் (GLC) வாயிலாக ரிம289.88 மில்லியன் நீண்ட கால வருவாய் ஈட்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
“மாநில அரசு, சி.எம்.ஐ மூலம் மாநில அரசின் கைவிடப்பட்ட நிலங்களிலிருந்து விண்ணப்பக் கோரிக்கை (ஆர்.எஃப்.பி), குறுகிய கால வாடகைகள் மற்றும் நீண்ட கால குத்தகைகள் மூலம் வருவாய் ஈட்டத் தொடங்கியுள்ளது.
“இது மாநில அரசாங்கத்திற்கு ஒரு ‘செயலற்ற வருமானம்’ ஆகும், ஏனெனில் இது மாநில அரசிடமிருந்து எந்த செலவையும் ஈடுபடுத்தாது, ஆனால் வருமானம் ஈட்டப்படும். அனைத்து வருவாயும் மாநில அரசுக்கு அனுப்பப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.