செபராங் ஜெயா – சுங்கை பிறையை கடக்கும் தற்காலிக மாற்று குழாய் அமைக்கும் திட்டம் இன்று நள்ளிரவு தொடங்கும்.
மேலும் கருத்து தெரிவித்த முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், முன்னதாக பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) அட்டவணையிட்டப்படி நாளை (ஜனவரி,14) காலை 6.00 மணிக்குள் நீர் மறுசீரமைப்புப் பணிகள் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“அம்பாங் ஜாஜர் பாலத்தில் இருந்து சுமார் 10 மீட்டர் (மீ) தொலைவில் உள்ள இந்தக் கட்டமைப்பின் மேல் 600 மில்லிமீட்டர் (மிமீ) அளவுள்ள இரண்டு குழாய்கள் வைக்கப்படும். இது ஒரு தற்காலிகக் கட்டமைப்புப் பணி, அதோடு இந்த அம்பாங் ஜாஜர் பாலத்தின் போக்குவரத்தையும் பாதிக்காது.
தற்போதுள்ள குழாய்களுடன் இணைக்க இந்த தற்காலிக மாற்றுக் குழாய் பிறை ஆற்றின் குறுக்கே கட்டப்படும்,” என்று இன்று இங்குள்ள பிறை ஆற்றின் அருகே முன்மொழியப்பட்ட மேம்பாட்டுத் திட்டப் பகுதியை பார்வையிட்ட பிறகு இவ்வாறு பதிலளித்தார்.
இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹாரி; ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லாய் மற்றும் PBAPP குழுவினர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான வளர்ச்சியில், நிதி, நில மேம்பாடு & பொருளாதாரம் மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், இங்குள்ள தற்காலிக மாற்றுக் குழாய் மேம்பாடு செபராங் பிறை மற்றும் வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்படாது என்று கூறினார்.
“இந்த சுங்கை பிறையின் அடிப்பகுதியில் இருக்கும் குழாயானது தென்மேற்கு மாவட்டத்திற்கு நீர் விநியோகிப்பதால், தென்மேற்கு மாவட்டம் பாதிக்கக்கூடும்.
“இருப்பினும், PBAPP குறைந்த நீர் அழுத்தத்துடன் தென்மேற்கு மாவட்டத்திற்கு நீர் விநியோகத்தை அனுமதிக்கிறது,” என்றார்.
இன்று மதியம் 12.30 மணி நிலவரப்படி, தென்மேற்கு மாவட்டத்திற்கு நீர் மறுசீரமைப்பு செயல்முறை 90 சதவீதத்தை எட்டியுள்ளதாக கொன் இயோவ் தெரிவித்தார்.
PBAPP, தேசிய நீர் சேவை ஆணையம் (SPAN) மற்றும் தன்னார்வ தீயணைப்பு சங்கம் (PBS) போன்ற தண்ணீர் லாரிகள் மற்றும் பல தென்மேற்கு அருகே சுமார் 10 சதவீதம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது என்று ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லாய் கூறினார். இந்த மாவட்டத்தில், 100% அதாவது அனைத்துப் பகுதிகளிலும் நீர் விநியோகம் பெறும் வரை உதவிகள் நல்கப்படும்.