குளுகோர் – நமது நாட்டின் 61-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுப்பரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் இணையுடன் சுதந்திர மாதப் பிரச்சார கொண்டாட்டம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சுதந்திர மாதப் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த பினாங்கு இந்து தர்ம மாமன்றத் தலைவர் திரு நந்தகுமார் சுதந்திர மாத பிரச்சாரத்தின் வழி தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே நாட்டுப்பற்று மற்றும் புரிந்துணர்வு மேலோங்க வழிவகுக்கும் என்றார்.
சுதந்திர தினக் கொண்டாட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31-ஆம் திகதி இடம்பெற்றாலும் அதன் கொண்டாட்ட்டம் பொதுவாகவே ஒரு மாதத்திற்கு அனுசரிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு நாட்டுப்பற்று பறைச்சாற்றும் வகையில் பல நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் இடம்பெறும்.
சுப்பரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பிரமுகர்கள் ஆகியோர் தேசிய கோடியைக் கையில் ஏந்தியவாறு தேசியப் பண், மாநில பண் , ஜாலூர் கெமிலாங் பண் இணைந்து பாடினர். மாணவர்கள் மூவின மக்களின் அடையாளமாகத் திகழும் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வந்தனர்.
மாமன்றத் தலைவர் திரு நந்தகுமார் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து கெளரவித்தார். மேலும் மாணவர்கள் நாட்டின் சுதந்திர வரலாறு மற்றும் அதன் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.
சிறு வயது முதல் மாணவர்களுக்கு நாட்டை நேசிக்கும் மாண்பினை புகட்ட வேண்டும் என திரு நந்தகுமார் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு அதிகாரி திரு சிங்காரவேலு, தலைமையாசிரியர் திரு குணசேகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு குமார், இந்து தர்ம மாமன்ற இளைஞர் பிரிவு தலைவர் திரு தனபாலன் கலந்து கொண்டார் .