செபராங் ஜெயா பொதுச் சந்தை ஆண்டு இறுதிக்குள் செயல்பாடுக் காணும்- மேயர்

Admin
whatsapp image 2024 10 22 at 14.27.02

பாகான் – செபராங் ஜெயா பொதுச் சந்தை மற்றும் உணவக மையம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக செயல்பாடுக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செபராங் பிறை மாநகர் கழகத்தின் மேயர் டத்தோ படேருல் அமீன் அப்துல் ஹமிட், இச்சந்தையின் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவித்தார்.

“இந்தத் திட்டம் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தால் (PDC) மேற்கொள்ளப்படுகிறது. அது முழுமையாக நிறைவடைந்ததும், எம்.பி.எஸ்.பி-இடம் ஒப்படைக்கப்படும்.

“வாகனம் நிறுத்துமிடப் பிரச்சனைகள் மற்றும் பயன்பாட்டு கேபிள்களை அகற்றுவது போன்ற சில தொழில்நுட்ப சிக்கல்களால் செயல்பாட்டு தேதியில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.

“இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வுக் காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த மாத இறுதிக்குள் அவை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பினாங்கு மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

“தொழில்நுட்பச் சிக்கல்கள் சரி செய்யப்பட்டதும், அனைத்து வணிகர்களும் இடமாற்றம் செய்யப்படுவர். தற்போது, அனைத்து வர்த்தகர்களும் லெபு தெங்கிரி 2 இல் உள்ள FMM பினாங்கு கட்டிடத்திற்கு அடுத்துள்ள தற்காலிக பொதுச் சந்தை மற்றும் நடைபாதை மையத்தில் வணிகம் மேற்கொண்டு வருகின்றனர்,” என்று பட்டர்வொர்த், எம்.பி.எஸ்.பி கவுண்டர் கம்போங் ஜாவா கிளையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் படேருல் இதனைக் கூறினார்.

முன்னதாக, புதிய எம்.பி.எஸ்.பி கவுண்டர் கம்போங் ஜாவா கிளையின் மேம்படுத்தும் திட்டத்தை துவங்கி வைத்தார்.

2019 இல் தொடங்கிய செபராங் ஜெயா பொதுச் சந்தை மற்றும் உணவக மையத்தின் சீரமைப்புத் திட்டத்திற்கு ரிம19.5 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒப்பந்ததாரரான சூபிகோன் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 12.5-ஏக்கர் நிலத்தில், சுமார் 263 வர்த்தகர்களுக்கு வியாபார தலம் அமைக்கப்படும்.

img 20241022 wa0041

புதிய சந்தையில் சோலார் பேனல்கள், 450 வாகன நிறுத்துமிடங்கள், மின்விசிறிகள், ‘கிரீஸ் ட்ராப்கள்’ உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

கம்போங் ஜாவாவில் உள்ள புதிய எம்.பி.எஸ்.பி கவுன்டரைப் பற்றி பேசுகையில், இந்த ஆண்டு பிப்ரவரி,1 ஆம் தேதி தொடங்கப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, அக்டோபரில் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது, என்றார்.

“இந்த மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரிம446,000 செலவிடப்பட்டுள்ளது. புதிய கவுண்டரில் பணம் செலுத்தும் கவுண்டர், சைபர் கவுண்டர்,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கவுன்டர் (OKU) மற்றும் டைபாய்டு ஊசி மருந்துகளுக்கான சிறப்பு கிளினிக் உள்ளிட்ட பல செயல்பாட்டு சேவைகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

“இத்திட்டம் செபராங் பிறை மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான எம்.பி.எஸ்.பி-இன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.