செபராங் பிறை நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் செபராங் பிறையில் “வாகனமற்ற ஒரு காலை பொழுது” (Pelancaran Seberang Perai Car Free Morning) நிகழ்வு கடந்த மே மாதம் 2015-ஆம் நாள் நடைபெற்றது. இதன் துவக்க விழாவை பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ மைமுனா முகமது ஷாரிப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். “வாகனமற்ற ஒரு காலை பொழுது” எனும் நிகழ்வு முதன்முறையாக செபராங் பிறையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் செபராங் பிறையில் “வாகனமற்ற ஒரு காலை பொழுது” நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் தமது பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டினைக் குறைப்பதற்கு வலியுறுத்துவதாகத் தமது உரையில் கூறினார். அதோடு, பொதுமக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும் அவர்களுக்குத் தூண்டுகோளாக விளங்கவும் இந்நிகழ்வு துவக்கப்பட்டது என்றார். செபராங் பிறையில் “வாகனமற்ற ஒரு காலை பொழுது” எனும் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுகிழமையில் காலை மணி 6.00 முதல் நண்பகல் 12.00 வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்காக செபராங் ஜெயா ஜாலான் தோடாக் 2 மற்றும் 3-இன் சுமார் 490மீட்டர் தொலைவு சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும். அந்த வேளையில் பொழுது போக்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளலாம் என செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் தெரிவித்தார்.
நிகழ்வின் துவக்க விழா அன்று ஏரோபிக்ஸ், சும்பா (zumba), மிதிவண்டி ஓட்டுதல், அரசாங்க மற்றும் அரசு சாரா முகவர்களின் கல்வி கண்காட்சி, கடைகள் எனப் பல கேளிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஆதரவு பெருமளவில் இருந்தது பாராட்டக்குறியதாகும்.
}