செபராங் பிறையில் UTC அமைக்க வேண்டும் – குமரன் பரிந்துரை

Admin
img 20240527 wa0122

ஜார்ச்டவுன் – “பினாங்கு மாநிலத்தின் கொம்தார் கட்டிடத்தில் மட்டுமே இயங்கும் புறநகர் உருமாற்ற மையம்(UTC) செபராங் பிறையிலும் அமைக்க வேண்டும்.

“UTC மையம் திறன்மிக்க மற்றும் ஒருங்கிணைந்த பொது சேவைகளை ஒரே குடையின் கீழ் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சி திட்டங்களில் ஒன்றாகும். இதில் அரசு சேவைகள், தனியார் துறை மற்றும் மக்களுக்குத் தேவையான இதர வசதிகளும் அடங்கும்.

“செபராங் பிறையில் உள்ள 1.1 மில்லியன் குடிமக்களுக்கு பயனளிக்க UTC அமைக்க உத்வேசிக்க வேண்டும்,” என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் சட்டமன்ற கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

செபராங் பிறையில் UTC மையம் அமைப்பதன் மூலம் இவ்வட்டார குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஊன்றுகோளாகவும் திகழும் என குமரன் கூறினார்.

“குடிமக்கள் பொதுச் சேவைகளை அணுகுவதை எளிதாக்குவது மட்டுமின்றி செபராங் பிறையில் UTC-யின் மேம்பாடு அரசாங்க சேவைகளைப் பெற விரும்பும் குடியிருப்பாளர்களுக்கு நேரத்தையும் பயணச் செலவையும் மிச்சப்படுத்த உதவும்.

“UTC இன் வளர்ச்சியானது செபராங் பிறைக்கு அதிக வருகையாளர்களையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும். இதன் வழி, உள்ளூர் பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்கும் மற்றும் உள்ளூர் மக்களுக்குப் புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க துணைப்புரியும்.

“கூடுதலாக, இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, செபராங் பிறை குடியிருப்பாளர்களின் அன்றாடத் தேவைகளையும் சிறப்பாகப் பூர்த்தி செய்யும். ஏனெனில், UTC அரசு சேவைகள் மட்டுமல்லாமல் சுகாதார மையங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் வணிக இடங்கள் போன்ற பல்வேறு வசதிகளையும் வழங்குகிறது,” என்றார்

குமரன் கூறுகையில், செபராங் பிறையில் UTC இன் மேம்பாடு, மக்கள் மற்றும் உள்ளூர் வணிகர்களிடையே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்.
மேலும், உள்ளூர் பகுதியில் டிஜிட்டல் மாற்றத்தை மேலும் வலுப்படுத்த வழிவகுக்கும்.

“மேலும், உள்ளூர் சமூகத்தை மேம்படுத்துவதற்குப் பயிற்சி பட்டறைகள், சுகாதார பேருரைகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் போன்ற திட்டங்களை மேற்கொள்ள முடியும்.

“உண்மையில், UTC அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு பொது மக்களின் நடமாட்டத்தை எளிதாக்கும், குறிப்பாக செபராங் பிறையில் இருந்து தீவுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது,” என்று அவர் கூறினார்.

“எனவே, இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு, செபராங் பிறை குடிமக்களுக்குக் கூடுதல் நன்மைகளை
வழங்க முடியும்,” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.