செயிண்ட் ஜோர்ச் மகளிர் இடைநிலைப் பள்ளி மாணவிகள் மகத்தானச் சாதனை

Admin

2013ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் அனைத்துலக உயிரியல் மருத்துவ சவால் கடந்த 22, 23 பிப்ரவரியில் நடைபெற்றது. இப்போட்டி அக்லோ சீன ஜூனியர் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியினை இக்கல்லூரியுடன் இணைந்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக யொங் லூ லின் மருத்துவப்பள்ளியும் சிறப்பாக ஏற்று நடத்தினர். இப்போட்டி இரண்டு பிரிவுகளாக அதாவது ஒலிம்பியாட் எனும் பிரிவு இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும், சிம்போசியம் எனும் பிரிவு மேல்நிலை ஆறாம் படிவ மாணவர்களுக்கும் நடத்தப்பட்டது. இவ்வாண்டின் போட்டி ‘நரம்பியல்’ எனும் கருப்பொருளில் மருத்துவப்பள்ளியின் பாடத்திட்டத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.

பினாங்கு மாநிலத்தைப் பிரதிநிதித்து முதன் முறையாக செயிண்ட் ஜோர்ச் மகளிர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.  ஏஞ்சல் கோ வெய் லிங், ஏஞ்சல் தே தி யிங், ஜெய்சீனா கோர், லீ சீ திங், நூருல் அதிகா பின்தி முகமது அரிப்பின், ஓய் ஜியா சீன், சிதஃப்னி காம் மெய் யுன், தான் ஹுய் லிங், விஷ்னு பிரியா, யுஹானிஷ் பின்தி அப்துல் மாலிக் ஆகிய 10 மாணவிகளைக் கொண்ட இக்குழுவிற்குச் சிறந்த ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் ஆசிரியர் குமாரி தனலட்சுமி விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் இக்குழுவினர் 9 தங்கப்பதக்கங்களும் 1 வெள்ளி பதக்கமும் பெற்று நாட்டிற்கும் பினாங்கு மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இம்மாணவிகளின் வெற்றியை அங்கிகரிக்கும் வகையில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் ரிம 5000 –ஐ பாராட்டு நிதியாகச் செயிண்ட் ஜோர்ச் மகளிர் இடைநிலைப் பள்ளிக்கு வழங்கினார். மாநில அரசு கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் பினாங்கு வாழ் மாணவர்களுக்குப் பல சன்மானங்களை வழங்கி ஊக்குவித்து வருவது வெள்ளிடைமலையாகும்.