பாகான் ஜெர்மால் – மாநில அரசு
மிக விரைவாகப் பரவும் திறன் கொண்ட டெல்தா வகை வைரஸ் வழக்குகள் பினாங்கில் அதிகமாகப் பதிவு செய்யப்படுவதால், பொது சுகாதார கட்டுப்பாட்டு தொடர்பான அமலாக்க நடவடிக்கைகளை தொடர்ந்து துரிதப்படுத்தப்படும்.
கடந்த (3/9/2021 ) முதல் தாமான் பாகான் பொதுச் சந்தையை மூட உத்தரவிட்டது சுகாதாரப் பணிக்காக மட்டுமின்றி, பொதுமக்களுக்கு வைரஸ் பரவும் அபாயத்தைத் தவிர்க்கவும் என்று வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கருத்து தெரிவித்தார்.
“மற்ற மாநிலங்களைப் போலவே, டெல்தா வகை வைரஸின் தாக்கம் இப்போது பினாங்கு மாநிலத்திலும் காண முடிகிறது.
“டெல்தா வகை வைரஸ் காற்றில் கலந்திருப்பதால் பொது மக்கள் அலட்சியம் கொள்ள வேண்டாம்.
“அமலாக்க நடவடிக்கைகளை கடுமையாக்குவது
எளிதானது செயல் அல்ல. இருப்பினும், சமூகத்தில் இந்த வைரஸ் இருப்பதை நான் விரும்பவில்லை,” என தாமான் பாகான் பொதுச் சந்தைக்கு வருகையளித்தபோது டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் இவ்வாறு விளக்கமளித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் செபராங் பிறை மாநகர் கழக மேயர் டத்தோ ரோசாலி முகமது மற்றும் வட செபராங் பிறை மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் நூர்சைனி முகமட் நூர் கலந்து கொண்டனர்.
ஜூலை,13 முதல் டெல்தா வகை வைரஸ் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் பரவியுள்ள நிலையில் நாடளவில் தொடர்ந்து வழக்குகள் அதிகரித்து வருகிறது என அறிக்கை வெளியிடப்பட்டது.
ஜெக்டிப்பின் கூற்றுப்படி, இம்மாநிலத்தில் நேற்று (3/9/2021) 1,726 புதிய கோவிட்-19 வழக்குகள்; சிகிச்சையில் உள்ள வழக்குகள் (9,701) மற்றும் இறப்புகள் (38) என பதிவாகியுள்ளன.
“பினாங்கில் கோவிட்-19 தினசரி வழக்குகள் 4 இலக்குகளில் நீண்ட காலமாக பதிவாகி வருவதை பார்க்கிறோம்.
“பொதுச் சந்தையை மூடும் நடவடிக்கை எளிதானது செயல் அல்ல, மாறாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் போது, தொற்றுநோய் சங்கிலியை பரவாமல் (கோவிட் -19) தடுப்பதற்கான நடவடிக்கையாக இது அமைகிறது,” என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பினாங்கு மக்களின் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மாநில அரசு எந்தவொரு அமலாக்க நடவடிக்கைகளையும் கடுமையாக்கத் தயங்காது.
தாமான் பாகான் பொதுச் சந்தை மூடும் நடவடிக்கையால் 39 சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, செபராங் பிறை பகுதியில் உள்ள 11 பொதுச் சந்தைகள் ஒன்று அல்லது இரண்டு முறை கோவிட்-19 வழக்குகள் பதிவு செய்யும் போது மூடப்பட்டன.