டத்தோ கெராமாட் – வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற & கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ வரும் நவம்பர் மாதம் தொடங்கி கோவிட்-19 தடுப்பூசி ஊசி பெற மறுத்த அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வைத்த பரிந்துரையை வரவேற்றார்.
டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப், இந்த நடவடிக்கை அரசு ஊழியர்களை தண்டிப்பதற்கு அல்ல, மாறாக நாடு மற்றும் மாநிலத்தை தொற்றுநோய் நெருக்கடியிலிருந்து வெளியேற்ற தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்து அனைத்து தரப்பினர் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவவே ஆகும், என்றார்.
“அனைத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி போட வேண்டும் என்ற சூழலில், ஒன்று அல்லது இரண்டு பேர் தடுப்பூசி போடவில்லை அல்லது தடுப்பூசி போட மறுக்கின்றனர் என்றால் இது தடுப்பூசி போட்டவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
“மேலும், நவம்பர் 1 ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட மறுத்தால், அவர்கள் மீது சட்டஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மத்திய அரசின் பரிந்துரைக்கு ஆதரவு அளிக்கிறேன்.
“நான் தனிப்பட்ட முறையில் இம்முடிவை முழுமையாக ஆதரிக்கிறேன். பினாங்கு மாநில அரசும் மத்திய அரசின் இம்முடிவை முழுமையாக ஆதரிக்கிறது,” என்று தாமான் ஃப்ரீ ஸ்கூல் குடியிருப்பாளர்களிடம் கோவிட்-19 சுய பரிசோதனை கிட் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு விளக்கமளித்தார்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர்; பினாங்கு மாநகர் கழக பொறியியல் இயக்குனர், இராஜேந்திரன் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் நகர்ப்புற ஊழியர்களும் இச்செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
ஜெக்டிப்பின் கூற்றுப்படி, அரசு ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்படவில்லை என்றால், அது அரசாங்க அலுவல் கவுண்டர்களில் பணிப்புரியும் அதிகாரிகளால் மக்களுக்கு விரும்பத்தகாத ஆபத்தை விளைவிக்கும்.
“எனவே, தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்குச் செல்ல வேண்டும்,” என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுபினருமான ஜெக்டிப் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, பினாங்கு மாநகர் கழக ஊழியர்களில் 97.7% இரண்டு மருந்தளவு தடுப்பூசியை முழுமையாக போட்டுள்ளனர் என தெரிவித்தார்.
“எனது துறை ஊராட்சிப் பிரிவின் கீழ், பினாங்கு மாநில வீட்டு வசதி வாரியம் (LPNPP) மற்றும் பினாங்கு மாநில நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் துறை அல்லது PLANMalaysia@Penang ஆகிய மூன்று துறைகளில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 100 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது,” என்று அவர் விளக்கமளித்தார்.