தண்ணீர் மலை தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு ரிம200,000 மானியம் – முதல்வர்

தங்க இரதத்தில் புறப்பட்ட முருகப் பெருமானின் சின்னமாக விளங்கும் வேலுக்குப் பக்த கோடிகள் அர்ச்சனைச் செய்தனர்.

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ரிம200,000 மானியம் வழங்குவதாக இன்று அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்திற்கு வருகையளித்த போது அறிவித்தார். மாநில அரசு தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த மானியம் வழங்குவது பாராட்டக்குறியதாகும்.
அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக தைப்பூசத் திருநாளை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.மேலும், மத மாற்றப் பிரச்சனையால் தனது பிள்ளைகளுக்காகப் போராடிய திருமதி இந்திராகாந்திக்கு நீதிமன்ற மேல் முறையீட்டில் அவரின் பிள்ளைகளின் மதமாற்றம் செல்லாது என வழங்கிய தீர்ப்பு அனைவருக்கும் கிடைத்த வெற்றி என சூளுரைத்தார்.
இந்திய நாட்டுக்கு வெளியில் உள்ள தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய முருகன் ஆலயமாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் மலை பாலதண்டாயுதபாணி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருள் சூழ்ந்த அவ்விடத்தையே ஒளிமயமாகக் காட்சியளிக்க வைத்து மக்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதனிடையே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோபுர நுழைவாசல் பக்தக்கோடிகள் மற்றும் சுற்றுப்பயணிகளை வெகுவாக கவரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், தண்ணீர்மலை ஆலயத்தில் கூடிய விரைவில் செயற்கை நீரூற்று அமைக்கப்படவிருப்பது பினாங்கு மாநில சுற்றுலாத்துறைக்கு மையக்கல்லாக அமையும் என மேலும் நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
மேலும், பினாங்கில் செட்டிப் பூசம் என்றழைக்கப்படும் தைப்பூச முதல் நாள் அன்று மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, கொடி மலை நாடாளுமன்ற உறுப்பினர் கீர் ஜொஹாரி ஆகியோர் வெஸ்தன் சாலையில் அமைந்திருக்கும் தண்ணீர் பந்தல்களுக்கு வருகை புரிந்து மக்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தனர். பந்தல் பொறுப்பாளர்கள் அவர்களுக்கு மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்து வரவேற்றனர்.
அழகிய கலை வேலைபாடுகளையும் அலங்கரிப்புகளையும் கொண்ட பந்தல்களில் மக்களின் பசி தீர்க்க அன்னதானங்களும் தாகத்தைத் தீர்க்கக் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
தைப்பூச முதல் நாள் தங்க இரத ஊர்வலம் அதிகாலை 5.00 மணியளவில் குவின் வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திலிருந்து முருகப் பெருமானின் வேல் புறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தங்க முருகன் சிலை வெள்ளி இரதத்தில் பவனி வந்தது. சாலையெங்கும் தேங்காய்கள் குழுமியிருக்க பக்தர்கள் கூட்டம் புடை சூழ தங்க மற்றும் வெள்ளி இரதங்கள் பவனி வந்தன. இந்தியர்கள் மட்டுமன்றி, சீனர்களும் இலட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து முருகனுக்குத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினர்.