ஆயர் ஈத்தாம் -உலகெங்கும் கொண்டாடப்படும் தமிழர்களின் முக்கிய கொண்டாட்டமான தமிழர் திருநாளை முன்னிட்டு முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வாழ்பவர்களுடன் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என பினாங்கு இந்துதர்ம மாமன்றத் தலைவர் ந.தனபாலன் கடந்த சனிக்கிழமை அன்று எஸ்பாயர் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆயர் ஈத்தாம் எஸ்பாயர் நெர்சிங் இல்லத்தில் சுமார் 30 முதியோர்களுக்கு அன்பளிப்பாக துண்டு வழங்கினர். மேலும், பினாங்கு இந்துதர்ம மாமன்ற ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கி அவர்களுடன் குதுகலமாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்துதர்ம மாமன்றம் பொங்கல் பண்டிகையை முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற குழந்தை காப்பகத்தில் கொண்டாடுவது பாராட்டக்குறியதாகும்.
இக்கொண்டாட்டத்தில் ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங், பினாங்கு இந்துதர்ம மாமன்ற தலைவர் ந.தனபாலன், துணைத் தலைவர் கிருஷ்ணன், மகளிர் அணி பிரிவுத் தலைவி ஓமலாவதி, செயலாளர் விஜய மாலதி, பொருளாளர் சுகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எஸ்பாயர் இல்லத்திற்கு மேசை, நாற்காலி, விதானம் (canopy) போன்ற தளவாடப் பொருட்கள் தேவைப்படும் நிலையில் ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் தனது சேவை மையத்தில் காணுமாறு கேட்டுக் கொண்டார். இவர்களின் தேவைகளை பூர்த்திச் செய்ய விரைவில் தாம் உதவிக்கரம் நீட்டுவதாக அவர் மேலும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதனிடையே, இந்நிகழ்வில் கலந்து கொண்ட பினாங்கு இந்துதர்ம மாமன்ற தலைவர் ந.தனபாலன் அரசு சாரா இயக்கங்கள் இம்மாதிரியான ஆதரவற்ற இல்லங்களில் பண்டிகை காலங்களைக் கொண்டாட முன்வர வேண்டும். இதனால், அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதோடு அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளையும் நல்க முடியும் என தனபாலன் மேலும் கேட்டுக் கொண்டார்.
சுமார் நான்கு மணி நேரம் எஸ்பாயர் நெர்சிங் இல்லத்தில் முதியோர்களுக்கு உணவளித்து அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகளை வழிநடத்தினர். பொதுமக்கள் இயன்ற உதவிகளை எஸ்பாயர் நெர்சிங் இல்லத்திற்கு வழங்குமாறும் பினாங்கு இந்துதர்ம மாமன்றத் தலைவர் தனபாலன்கேட்டுக்கொண்டார். உதவிக்கரம் நீட்டவிரும்பும் பொதுமக்கள் கோபி (எஸ்பாயர் நெர்சிங் இல்ல நிர்வாகி) 016-4421709 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
இதனிடையே, இந்துதர்ம மாமன்றமும் இந்த இல்லத்தை சிறப்பாக வழிநடத்த எதிர்வரும் காலங்களில் உதவிக்கரம் நீட்டுவதாக உறுதியளித்தார். இந்துதர்ம மாமன்ற உறுப்பினர்களின் மனிதநேயம் இதன் வழி சித்தரிக்கின்றது.