பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக மாநில அரசின் முயற்சியில் நவீன கற்றல் கற்பித்தல் திட்டம் (Smart Wireless Interactive Presentation & Education System) கடந்த 21 மே 2015-ஆம் நாள் கொம்தார் ‘ஏ’ அரங்கத்தில் அறிமுகப்படுத்தினார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். வயர்லெஸ் தொழில்நுட்பங்களின் மூலம் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் சூழ்நிலையை மாற்றியமைக்கும் வாய்ப்பு இத்திட்டத்தின் மூலம் சாத்தியமாகும்.
இத்திட்டத்தின் வழி சிறந்த கற்பித்தல் முறையின் வழி அனைத்து மாணவரின் கவனத்தையும் ஈர்க்க முடியும் என்றார் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு அதிகாரி டத்தோ அன்பழகன் அவர்கள். அதோடு, மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலும் புத்தாக்க திறனும் மேலோங்க வாய்ப்பு அதிகாக உள்ளது. ஆசிரியர் இந்நவீன திட்டத்தின் உதவியுடன் பாட வேளையில் அனைத்து மாணவர்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், சிறப்புரையாற்றிய இரண்டாம் துணை முதல்வர் அவர்கள் இந்நவீன கற்றல் கற்பித்தல் திட்டம் (Smart Wireless Interactive Presentation & Education System) மலேசியாவிலேயே பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளில் முதன்முறையாக அமல்படுத்துவதாகக் கூறினார். பிற மொழி பள்ளிகளைப் போன்று தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இன்னும் சிறப்பான தேர்ச்சியை அடைய பினாங்கு மாநில அரசின் அரிய முயற்சி என்றார். இதனை ஆசிரியர் நல்ல முறையில் பயன்படுத்தி மாணவர்களை மேலும் மேன்மையடைய உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது மற்றொரு சிறப்பம்சமாக ‘சுற்றுச்சூழலை நேசிப்போம்’ என்ற நூலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நூல் பினாங்கு மாநில அனைத்து 28 தமிழ்ப்பள்ளிகளின் நூல்நிலையத்திற்கு எடுத்து வழங்கினார் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். சுற்றுச்சூழல் பேணுவதைப் பற்றி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நூலின் முக்கிய நோக்கம் என்றார் இதன் படைப்பாளர் எஸ். ஸ்ரீ உமேஸ்வரன். இந்நூல் பல முக்கிய தகவல்களையும் புள்ளி விபரங்களையும், ஆதாரங்களையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக மேலும் அவர் கூறினார்.
நமது சுற்றுச் சூழலை பாதுகாப்பது மிக அவசியமாகும். நாம் அதை பராமரிக்கவில்லை என்றால் இன்று அனுபவிக்கும் பசுமையான காடுகள் விரைவில் அழிந்துவிடும். சுற்றுச் சூழல் நமக்கு மிகவும் மதிப்புமிக்க புதையலாக இருக்கிறது. அதை எதிர்கால தலைமுறையினர் உட்பட அனைவரும் அனுபவிக்க வேண்டும். நமது பூமியே எதிர்கால தலைமுறையினருக்கு நாம் கொடுக்கும் விலையுயர்ந்த சொத்தாகும். வருங்கால சந்ததியினர் ஆரோக்கியமான, சுத்தமான மற்றும் அழகான சூழலை அனுபவிக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என தமதுரையில் கூறினார் மாநில இரண்டாம் துணை முதல்வர் அவர்கள். தற்போது ஆங்காங்கே பசுமை பிரச்சாரம் நடத்தப்பட்டாலும் பொதுமக்களின் விழிப்புணர்வே இப்பிரச்சனைக்கு தக்க தீர்வாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். அதோடு, பள்ளிகளில் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் இளம் பருவத்தில் விதைப்பது ஆசிரியர்களின் தலையாய கடமையாக தாம் கருதுவதாகக் கூறினார்.
இதனிடையே, அதே தினத்தன்று முன்னால் புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி மாணவனான லினேஸ் குமார் எஸ்.பி.எம் அரசு தேர்வில் 10’A’க்கள் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அம்மாணவனின் வெற்றியை அங்கீகரிக்கும் பொருட்டு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் அவர்கள் மடிகணினி ஒன்றை பரிசளித்தார். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற அம்மாணவனை பாராட்டினார் மதிப்பிற்குரிய ப.இராமசாமி அவர்கள்.