ஜாவி- 10 திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திட்ட வகுப்புகளை ஜாவி தமிழ்ப்பள்ளியில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னிலை வகிப்பதை பேராசிரியர் பெருமிதத்துடன் தெரிவித்ததோடு ஜாவி தமிழ்ப்பள்ளியின் முயற்சியை மனதார பாராட்டினார்.
கியூஆர் குறியீடு திட்டம், விவேக திறன்பேசி செயலித் திட்டம், இணையம்வழி ஆசிரியர் பணித்திற மேம்பாட்டு நடவடிக்கை, கியூஆர் குறியீட்டின் வழி மாணவர்களின் நன்னெறிப் பண்புகளைப் பதிவு செய்தல், முப்பரிமாண அச்சடிப்புக் கழகம், ஆசிரியர் மாணவர் கியூஆர் அட்டை, பள்ளித் தகவல் இணையர் பக்கம், ஆசிரியர் மாணவர் இலக்கியல் இயக்காளர்கள், இணையக் கற்றல் திட்ட மருத்துவர்கள் என பத்துத் திட்டங்கள் இவற்றில் அடங்கும். இத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஜாவி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்துப் பொறுப்பாளர்களும் பொறுப்புடன் செயல்பட்டு வருவதுடன் முப்பரிமாண அச்சடித்துத் திட்டம் உள்ளிட்ட நான்கு திட்டங்களில் இப்பள்ளி மாணவர்கள் சிறந்த அடைவுநிலையைப் பெற்று விளங்குவது மற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கும் நல்லதொரு முன்னோடியாகத் திகழ்கிறது என்றால் மிகையாகாது.
“உலக அளவில் மின்னியல் தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் வேளையில் நமது தமிழ்ப்பள்ளிகளிலும் அவற்றை கொண்டு செயல்படும் வகையில் தொடர்ந்து மாநில அரசு முயற்சிகள் மேற்கொள்ளும்; மேலும், மாநில அரசு வழங்கும் மானியங்களை சிறப்பாகக் கையாள்வதில் ஜாவி தமிழ்ப்பள்ளி நல்லதொரு முன்மாதிரியாகச் செயல்படுவது மன நிறைவளிக்கிறது”,” என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் இராமசாமி அகம் மகிழ தெரிவித்தார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக்குழுத் தலைவர் டத்தோ அன்பழகன், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சிங்காரவேலு, மாநிலத் தமிழ்ப்பள்ளி துணை இயக்குநர் குமாரி சகுந்தலா, பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் கேசவன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பினாங்கு மாநில அரசு மாணவர்கள் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும் அதிலிருந்து பயன்பெறும் வகையில் ஸ்தெம் கல்வி, மின்னியல் நூல்நிலையம், தெக் டோம், அறிவியல் கபே போன்ற திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இத்திட்டங்களில் பங்கெடுத்து மேலும் தங்களின் சிந்தனை ஆற்றல் மற்றும் புத்தாக்க திறன்களை மேன்மைபடுத்தி கொள்ள வழியுறுத்தப்படுகின்றனர்.