பட்டர்வொர்த் – பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி இடையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பங்கள் & ரோபோ போட்டியுடன் கூடிய கண்காட்சி அண்மையில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநில 28 தமிழ்ப்பள்ளிகளும் இப்போட்டியில் கலந்து சிறப்பித்தனர்.
அறிவியல் துறையில் மாணவர்களின் ஆர்வத்தையும் இலை மறை காயாக இருக்கும் ஆற்றல்களையும் வெளிகொணர இப்போட்டி சிறந்த தளமாக அமையும். மாணவர்களுக்கு இத்துறையில் சிறந்த வேலை வாய்ப்பு இருப்பதாக தமதுரையில் குறிப்பிட்டார் பேராசிரியர்.
இன்னும் வரக்கூடிய காலங்களில் தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என பேராசிரியர் ப.இராமசாமி நம்பிக்கை தெரிவித்தார். ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிகளின் கண்காட்சி கூடங்களும் மாணவர்களின் புத்தாக்க திறமைகளையும் ஆற்றல்களையும் உள்ளடக்கியுள்ளதை மனதார பாராட்டினார்.
பினாங்கு மாநிலத்தை அனைத்துலக மற்றும் அறிவார்ந்த நகரமாக உருமாற்றும் முயற்சியில் மாநில அரசு தேக் டோம் மையம், கர்பால் சிங் கற்றல் மையம், பினாங்கு அறிவியல் காபே மற்றும் ஜெர்மன் இரட்டை தொழிற்பயிற்சி மையம் போன்றவைகளை உருவாக்கியுள்ளன பாராட்டக்குரியதாகும்.பினாங்கு மாநில மாணவர்கள் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்திலும் புலமை பெற்று சிறந்து விளங்க வேண்டும் எனும் நோக்கில் இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டக்குரியதாகும்.
மாநில அரசு இந்த திட்டத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கெடுப்பு அதிகரித்து அனைத்துலக ரீதியில் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் இலக்கைக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. இந்நிகழ்வில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக்குழு தலைவர் டத்தோ அன்பழகன், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.