கெபுன் பூங்கா – “இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழ்ப்பள்ளியில் பயின்ற முன்னால் மாணவர்கள் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஊன்றுகோளாக விளங்க வேண்டும். தமிழ்ப்பள்ளியைத் தனது அடித்தளமாகக் கொண்டு முன்னேறிய மாணவர்கள் அவர் தம் பள்ளிகளுக்கு நிதியுதவி மட்டுமின்றி நிபுணத்துவம், பங்களிப்பு, தன்னார்வலர்களாக ஈடுபடுதல் ஆகியவை தமிழ்ப்பள்ளியின் கல்வி மேம்பாட்டுக்கு உறுதுணையாக அமையும்,” என மலேசிய இந்து சங்க மாநில துணைத் தலைவரும் புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் தலைவருமான விவேக நாயகன் திரு தர்மன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்திய சமூகம் ஒரு கல்வி சார்ந்த சமூகமாக உருமாற்றம் காண அனைவரின் பங்களிப்பு அவசியம், என்றார்.
மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் 44-வது திருமுறை ஓதும் விழா ஆயிர வைசியர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.
“மாநில அரசு, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்காக பல ஆக்கப்பூர்வமானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
“இந்தியர்களின் சமூகநலன் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு மானியம் வழங்குகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிதியுதவி வழங்குவது பாராட்டக்குரியது,” என திருமுறை ஓதும் நிறைவுவிழாவில் கலந்து கொண்ட புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய் இவ்வாறு தெரிவித்தார்.
“இந்து சமயத்தைப் பறைச்சாற்றும் இந்த திருமுறை ஓதும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பங்கேற்பு அதிகரிப்பதைக் கண் கூடாக காண முடிகிறது. மேலும், மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை ஒவ்வொரு ஆண்டும் 200-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகள், திட்டங்கள், நிகழ்ச்சிகள் ஏற்று நடத்துகிறது. கோவிட்-19 தொற்று நோய் காலக்கட்டத்திலும் இந்தப் பேரவை தொடர்ந்து சமூகத்திற்குச் சேவை ஆற்றியது பாராட்டக்குரியது, என்றார்.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய் மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவைக்கு ரிம10,000-ஐ நன்கொடையாக வழங்கினார்.
இவ்விழாவில் 140 மாணவர்கள் மற்றும் 130 பெற்றோர் கலந்து கொண்டனர். தனிநபர் மற்றும் குழு முறையில் தேவாரம் ஓதுதல், மேடை பேச்சுப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி என சமயம் மற்றும் கலை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து திருநீறு பூசி பார்ப்பதற்கே வண்ணமயமாகக் காட்சியளித்தனர்.
44-வது திருமுறை ஓதும் விழாவை பினாங்கு மாநகர் கழக கவுன்சிலர் காளியப்பன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். திருமுறை ஓதும் விழாவானது மாணவர்களின் சமய நம்பிக்கையை வளர்ப்பதோடு நன்னெறிப் பண்புகளுடன் சிறந்த மாணவனாக உருவாகுவதற்கு துணைபுரிகிறது.
இந்நிகழ்ச்சியில், மலேசிய இந்து சங்க பினாங்கு மாநில பொருளாளர் கலாராணி; ஆயிர வைசியர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரேசுவரர்
ஆலயச் செயலாளர் கணேசன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வட்டார ரீதியில் நடத்தப்படும் இந்த திருமுறை ஓதும் போட்டியில் வெற்றிப் பெறும் மாணவர்கள் மாநில ரீதியிலான போட்டியில் கலந்து கொள்வர். இப்போட்டியில் வெற்றி வாகைச் சூடும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்படுவர் என அறியப்படுகிறது.