தமிழர்களின் பண்பாட்டுப் பெருநாளும் தமிழ்ப் புத்தாண்டுமான தைப்பொங்கலைத் தாமான் புவா பாலா மக்கள் கடந்த 19-ஆம் திகதி தங்கள் வீடமைப்புத் தளத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு தடைகளையும் போராட்டங்களையும் தாண்டி பினாங்கு மக்கள் கூட்டணி அரசு பாரம்பரியமிக்க இந்தியக் கிராமமான புவா பாலா கிராம மக்களுக்கு அவர்கள் வசித்த நிலத்திலேயே அழகிய இரட்டை மாடி வீடுகளைக் கட்டி கொடுத்துச் சாதனை படைத்தது உள்ளங்கை நெல்லிக்கனியே.
இன்று அந்தப் புதிய வீட்டில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் புவா மக்கள் ஒற்றுமைத் திருநாளான பொங்கல் விழாவினைச் சிறப்பான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர். மதியம் 3 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற்ற இவ்விழாவினை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு கர்ப்பால் சிங் தலைமை தாங்கினார். ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயரும் பினாங்கு முதல்வரை பிரதிநிதித்து ஆட்சிக் குழு உறுப்பினர் திரு இங் வெய் எய்க்கும் சிறப்பு வருகை மேற்கொண்டனர்.
ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திர் நேதாஜி இராயரும் அவர்தம் மனைவியும்
குத்து விளக்கேற்றி பொங்கல் விழாவினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கின்றனர்.
பினாங்கு நகராண்மைக் கழக உறுப்பினர் திரு பிரேம் ஆனந்த் தலைமையில் ஒரு சிறு செயற்குழு அமைக்கப்பட்டு இப்பொங்கல் கொண்டாட்டம் பல போட்டிகளையும் மேடைப் படைப்புகளையும் உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் 3 தொடங்கி குழு வாரியாகக் கோலம் போடும் போட்டி நடத்தப்பட்டது. வானவில்லின் வண்ணங்களைச் சுமந்த பல்வேறு இரங்கோலி கோலங்கள் கண்களைக் கவர்ந்தன. தங்களின் ஓவியத் திறன்களைப் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் வெளிபடுத்தினர். அதனைத் தொடர்ந்து, பல்வகை போட்டி விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இந்தியப் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான உரியடித்தல் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், இப்போட்டி பொதுவானது.. பெண்களும் கலந்து கொள்ளலாம். உயரே கட்டப்பட்டிருக்கும் மண்சட்டியைத் துணியால் கண்களை மறைத்துக் கட்டியவாறு பிரம்பால் அடித்து உடைக்க வேண்டும். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள் அனைவரும் இப்போட்டியில் பங்கெடுத்து உற்சாகத்துடன் விளையாடினர். திசை தெரியாமல், அங்கு இங்கும் தடுமாறிக் கொண்டு உரி அடிக்க முயன்றது, மக்கள் மத்தியில் சிரிப்பலையை உண்டாக்கியது. எனினும், பங்கேற்பாளர்களில் ஒரு சிலரே விடாமுயற்சியுடன் கவனத்தைச் சிதறவிடாமல் மண்சட்டியைச் சரியாக அடித்துச் சிதற வைத்தனர்.
அதன் பின்னர், ஆண் பெண் இரு பாலருக்கும் கயிறு இழுக்கும் போட்டி நடத்தப்பட்டது. பெண்களும் தமிழ் மறவர்கள் என்பதை இந்தக் கயிறு இழுக்கும் போட்டியில் பங்கெடுத்து நிரூபித்தனர். போட்டியாளர்கள் தங்கள் முழு வலிமையையும் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் முழு மூச்சாக நின்று கயிறு இழுத்தது தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றியது. தொடர்ந்து, சிறுவர்களை மகிழ்ச்சி படுத்தும் வண்ணம் அவர்களுக்கென்று பலூன் ஊதி வெடிக்கும் போட்டி, மாவில் ஒளிந்துள்ள மிட்டாய்களை வாயால் ஊதி எடுக்கும் போட்டி, போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர் சிறுமியர்கள் குதூகலத்துடன் போட்டிகளில் பங்குபெற்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்தனர். வெற்றி பெறுவது இவர்களது நோக்கமன்று, நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதே இவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாக விளங்கியது எனலாம். போட்டி விளையாட்டுகள் முடிவடைந்தபின் 10 மண் சட்டிகளில் பொங்கல் வைக்கப்பட்டது. இது ஒரு போட்டியாக அல்லாமல் மிகவும் ருசியான பொங்கலை வைக்க வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் ஒற்றுமையுடன் பொங்கலை வைத்தனர். புவா பாலா மக்கள் சற்று வித்தியாசமாக அன்று வெண்பொங்கல் வைத்தனர். இதற்கிடையில் இந்தியப் பாரம்பரிய இசை வாத்தியங்களான உறுமி, தப்பு ஆகியவற்றைக் கொண்ட இசைப்படைப்புகள் அவ்விடத்தையே உற்சாகமூட்டியது எனலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு கர்ப்பால் சிங் சிறப்புரையாற்றுகிறார்.
மாலையில், சிறப்பு பிரமுகர்கள் வந்து பொங்கல் கொண்டாட்டத்தை மேலும் மெருகேற்றினர். அவர்களை நாதஸ்வர மேளத் தாளத்துடன் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். அதுமட்டுமன்றி, பினாங்கு முதல்வருக்காகப் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்களைக் கவரும் வகையில் மிகவும் அழகாக சிறிய இரதம் போல் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் முதல்வரின் பிரதிநிதியான திரு இங் வெய் எய்க்கும் அவர்தம் மனைவியும் அமர்ந்து வந்தனர். பரதநாட்டியம், மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கோலாட்டம் ஆகிய இந்தியப் பாரம்பரிய நடனப்படைப்புகள் வழங்கப்பட்டன. வரவேற்புரையாற்றிய திரு நேதாஜி இராயர், கிராமமாக இருந்த புவா பாலாவை இன்று உயர்தர வீடமைப்புப் பகுதியாக அதாவது கம்போங் புவா பாலாவைத் தாமான் புவா பாலாவாக உருமாற்றிய மக்கள் கூட்டணியின் வெற்றியை நினைவுகூர்ந்து பேசினார். பாரம்பரியம் மிகுந்த பொங்கல் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த செயற்குழு உறுப்பினருக்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையைப் போல் இவ்வாண்டு மக்கள் கூட்டணி அரசும் பொதுத் தேர்தலில் நல்ல அறுவடை செய்யவிருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு கர்ப்பால சிங் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மக்கள் கூட்டணி மத்திய அரசாக ஆட்சிக்கு வந்தால் தீபாவளி திருநாளுக்குத் தேசிய விடுமுறை வழங்க வழிவகை செய்யப்படும் என்றும் கூறி வந்தவர்களின் கரவொலியைப் பெற்றுக் கொண்டார்.