பினாங்கு மாநில வாடகைக்கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் சேவையும் பங்களிப்பும் அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு ஊக்கத்தொகையாக தலா ரிம600-ஐ வழங்குகிறது. மாநில அரசு 2013-ஆம் ஆண்டு தொடங்கி வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வேளையில் முதல் முறையாக பேருந்து ஓட்டுநர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கியது. மாநில முதல்வரிடமிருந்து ஊக்கத்தொகையை ஓட்டுநர்கள் பெற்றுக்கொண்டனர்.
அண்மையில் சமூக வளைதளங்களில் பரவலாக பேசப்பட்ட வாடகைக்கார் ஓட்டுநர் தம் வாடிக்கையாளரின் ரிம 1,000 ரொக்கப்பணத்தை அவரிடமே திரும்ப ஒப்படைத்தார் எனும் செய்தி வாடகைக்கார் ஓட்டுநர்களின் ஒருமைப்பாட்டினை பிரதிபலிப்பதாக வாடகைக்கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்குச் சன்மானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கிய பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கூறினார். முகமாட் யூசோப் எனும் அந்த வாடகைக்கார் ஓட்டுநருக்கு மாநில அரசு பதக்கம் வழங்கி கௌரவித்தது. கீழ்க்காணும் அட்டவணை ஊக்கத்தொகை பெற்றவர்களின் எண்ணிக்கையை சித்தரிக்கின்றது.
இவ்வாண்டு வாடகைக்கார் மற்றும் பேருந்து ஓட்டுநருக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க ரிம 702,900.00 ஒதுக்கியுள்ளது. மாநில அரசு வழங்கும் அனைத்து ஊக்கத்தொகைகளும் சிறந்த தூய்மையான நிர்வாகத்தினால் மட்டுமே சாத்தியம் அடைவதாக தமதுரையில் குறிப்பிட்டார் மாநில முதல்வர். மேலும், ஜி.எஸ்.தி எனும் பொருள் சேவை வரியை நிறுத்துமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார். இதனால், குறைந்த வருமானத்தில் வாழும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கேட்டுக்கொண்டார்.இம்மாதிரியான ஊக்கத்தொகையின் மூலம் அவர்களின் சுமைகளை குறைக்க முடியும்.
பினாங்கு பேருந்து ஓட்டுநர் சங்கம், மாநில அரசாங்கம் மற்றும் ஓட்டுநர்களுடனான உறவை வலுப்படுத்த சிறந்த கருவியாக அமைகிறது. இச்சங்கத்தின் துணையுடன் பினாங்கு பேருந்து ஓட்டுநர்கள் சிறந்த மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். பினாங்கு மாநிலத்தின் மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு பாதுகாப்பாக செல்வதை மேம்படுத்த சிறந்த ஊடகமாகத் திகழ்வது பேருந்து ஓட்டுநர்களே எனப் புகழாறம் சூட்டினார் முதல்வர்.
பினாங்கிற்கு வருகையளிக்கும் சுற்றுப்பயணிகளுக்கு வாடகைக்கார் முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான சேவையை வழங்குவதன் மூலம் சுற்றுப்பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வாடகைக்கார் ஓட்டுநர்கள் மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘யூபர்’ மற்றும் ‘கிரேப் கார்’ வசதிகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனினும், ‘யூபர்’ போன்ற சேவைகளில் பயணிகளுக்கு வாடகைக்கார் போல காப்புறுதி வழங்கப்படுவதில்லை. இதனால், அவர்களின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளதாக அத்தினத்தன்று வருகையளித்த வாடகைக்கார் ஓட்டுநர்கள் குறிப்பிட்டார்.