பினாங்கு நகராண்மை கழக ஏற்பாட்டில் நகராண்மை சேவைத் துறை ஊழியர்களுக்கு 5 கிலோ கிராம் அரிசிப் பொட்டலம் வழங்கப்பட்டது. நகராண்மை சேவைத் துறை ஊழியர்களின் சேவையைப் பாராட்டும் பொருட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டாம் முறையாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பினாங்கு நகராண்மை கழக ஆலோசகர்களான திரு ஒங் ஆ தியோங், திரு தஹிர் ஜலாலுடின், திரு லிம் சியு கிம். திரு கோய் சியோங் கின், லிம் செங் ஹொ ஆகியோர் நகராட்சி சேவைத் துறை ஊழியர்களுக்கு 710 அரிசி பொட்டலங்களை எடுத்து வழங்கினர்.
நகராண்மைக் கழக ஊழியர்களின் சிறந்த சேவையால்தான் இம்மாநிலச் சுற்றுப்புறச் சூழல் தூய்மையாகவும் பொலிவாகவும் காணப்படுகிறது என்றார் நகராண்மை கழக ஆலோசகர் ஒங் ஆ தியோங். கடந்தாண்டில் நடத்தப்பட்ட ‘தூய்மையான கழிப்பறை 2012’ போன்ற பிரச்சாரம் நகராண்மை கழக ஊழியர்களின் சிறந்த சேவையினை நன்கு புலப்படுத்தியது என்லாம். பினாங்கு நகராண்மைக் கழக இயக்குநரான உயர்திரு முபாரக் பின் ஜூனூஸ் நகராண்மை சேவைத் துறை ஊழியர்கள் பயன்படுத்தும் வாகனங்களையும் அதன் செயல்பாட்டினையும் எடுத்துரைத்தார். மேலும் பினாங்கு மாநில சுற்றுப் புற தூய்மையை மேம்படுத்தும் வண்ணம் தொழில்நுட்பம் வாய்ந்த இயந்திரம் மற்றும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் குறிப்பிட்டார். மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ் அதிகமான ஊழியர்கள் இச்சேவையில் பணி நியமனம் செய்யபபட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் போது பாரவுந்தில் பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரத்தைக் கொண்டு கால்வாயைத் தூய்மைப்படுத்தும் முறை காண்பிக்கப்பட்டது. நகராண்மை சேவைத் துறை ஊழியர்கள் மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ்ப் பல பாராட்டுகள் மற்றும் சன்மானம் பெறுவதாகக் கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். சிறந்த சேவையாற்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரிம150 கூடுதல் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கை இவ்வூழியர்களுக்குச் சிறந்த உந்துதலாக அமைவதாகக் கூறினர். 10 ஆண்டுகளாக நகராண்மை சேவைத் துறைக்கு விண்ணப்பம் செய்தும் மக்கள் கூட்டணியின் ஆட்சிக்குப் பிறகே தமக்கு இவ்வேலை கிடைத்ததாகப் பணியாளர் திரு.விக்கினேஸ்வரன், வயது 34 புகழாரம் சூட்டினார்.
அரிசிப் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்ட பினாங்கு நகராண்மை கழகப் பணியாளர்களில் ஒரு சிலர்.