தேசிய மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்  சங்கம் சிறந்த தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்க வேண்டும் – பேராசிரியர்

Admin

செபராங் ஜெயா – “ஒரு சங்கத்தை சிறந்த முறையில் வழிநடத்த தலைமைத்துவம் அடித்தளமாகத் திகழ்கிறது. கடந்த காலங்களில் சங்கங்களிலே தொழிற்சங்கம் முதன்மை வகித்து, தொழிலாளர்களின் உரிமைகள் அன்றும் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. அது போலவே, இந்த தேசிய மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்  சங்கத்தில் அதிகமான ஆசிரியர்கள் இணைந்து ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் களைதல்; கல்வி சார்ந்த விவகாரங்களுக்குக் குரல் கொடுத்தல்; மாணவர்களுக்கு கல்வித் திட்டங்கள் வழிநடத்தல் ஆகியவை மேற்கொள்ள இச்சங்கம் வழிகாட்டியாகத் திகழும், என மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கேட்டுக்கொண்டார்.

“1964- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கத்திற்கு உயிரூட்டுவதற்கும் எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் நடத்துவதற்கும் அனைத்து தமிழ்ப்பள்ளி, பாலர்ப்பள்ளி, தேசிய மற்றும் இடைநிலைப்பள்ளியைச் சார்ந்த தமிழ் ஆசிரியர்கள் இச்சங்கத்தில் இணைந்து செயல்பட வேண்டும்,” என பினாங்கு மாநில துணை முதல்வரோடு இணைந்து ஆசிரியத்தை வலுப்படுத்தும் பட்டறையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சிங்காரவேலு, இந்து அறப்பணி வாரிய தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ இராமசந்திரன், மலாயா தமிழ்ப் பள்ளி ஆசிரியர் தேசிய சங்கத் துணை தலைவரும் பினாங்கு கிளையின் தலைவருமான எம்.ஜி குமார், பினாங்கு மாநில  தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு செயற்குழுத் தலைவர் டத்தோ கே அன்பழகன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இப்பட்டறையில் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.