நகர்ப்புற புதுப்பித்தல் கொள்கைகளை எளிதாக்குவதற்கு சட்டத்திருத்தம் அவசியம் – முதலமைச்சர்

Admin

பந்தாய் ஜெர்ஜா – 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மசூரி போய்ண்ட் 5 புளோக் வீடமைப்பின் புதுப்பித்தல் திட்டம் முதல் முறையாக பினாங்கு மாநில அரசின் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வீடமைப்புத் திட்டம் இரண்டு படுக்கையறைகள் மற்றும் ஒரு குளியலறையைக் கொண்டுள்ளது. எனவே, புதிதாகக் கட்டப்படும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்பில் அதன் அசல் குடியிருப்பாளர்கள் மிகவும் வசதியான மற்றும் நவீனமான மட்டுமின்றி பொழுதுபோக்கு வசதிகளுடன் புதியக் குடியிருப்புப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்படுவதை உறுதிசெய்ய புதுப்பிக்கப்படவுள்ளது.

எனவே, பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியம் (LPNPP) மூலம் மாநில அரசு இன்று மசூரி நகர்ப்புற புதுப்பித்தல் (பி.எஸ்.பி) திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது சுமார் 1,000 அசல் குடியிருப்பாளர்களை இங்குள்ள புதியக் குடியிருப்பு வீடுகளுக்கு மாற்றப்படுவர். இந்த திட்டம் நான்கு ஆண்டுகளுக்குள் (2028) நிறைவுப்பெறும்.

மாநிலத்தின் முதல் முன்னோடித் திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், நாடு முழுவதும், குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் நகர்ப்புற புதுப்பித்தல் (PSB) திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, புத்ராஜெயா பொருத்தமான சட்டத்தை உருவாக்கலாம் அல்லது திருத்தம் செய்யலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“250 சதுரஅடி அளவு கொண்ட இந்த சிறிய வீட்டு வகை (குறைந்த விலை) தனிநபர் அல்லது திருமணமாகாத தொழில் வல்லுநர்களுக்கு ‘ஸ்டுடியோ’ அடுக்குமாடிக் குடியிருப்பாக இருக்க பொருத்தமானதாக இருக்கலாம்.

“இதுவே ஒரு குடும்பம் என்றால், மாநில அரசு மத மற்றும் சமூக கோரிக்கைகளுக்கு இணங்க மூன்று அறைகளைக் கொண்ட ஒரு குடியிருப்பைக் குறைந்தபட்ச அளவுடன் நிர்ணயித்ததுள்ளது

“இருப்பினும், இந்த மசூரியின் ஐந்து புலோக்குள் கொண்ட அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்தைத் தவிர பெரும்பாலான குறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களில் அதன் மேம்பாட்டு வடிவமைப்பு அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.

“எனவே, மாநில அரசு இந்தத் திட்டத்தில் தற்போதுள்ள சட்டங்களை மத்திய அரசாங்கம் உருவாக்கலாம் அல்லது திருத்தம் செய்யலாம் என்று நம்புகிறோம். அதனால் தற்போதுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் ஈடுபாட்டின் செயல்முறையை எளிதாக்குவதற்கும், சுமூகமாக்குவதற்கும் சட்ட விதிகளைப் பயன்படுத்தலாம்,” என்று மசூரி வீடமைப்புப் புதுப்பித்தல் திட்டத்தின் அடிக்கால் நாட்டு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் சாவ் விளக்கமளித்தார்.

மத்திய மற்றும் மாநில அசாங்கம் தரமான குடும்ப வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவதில் உறுதியாக இருப்பின், குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நட்பான முறையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

“பழைய அடுக்குமாடிக் குடியிருப்புகள் தற்போதைய தேவைகளுக்கு இணங்கவில்லை. மாநில அரசின் கொள்கையான குடும்பத்தில் கவனம் செலுத்த முன்னோக்கி நகர வேண்டுமெனில் குழந்தைகளை வளர்ப்பதற்கு பொருத்தமான வீட்டு வசதிகளுடன் தொடங்க வேண்டும்,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.

இதற்கிடையில், வீட்டுவசதி, ஊராட்சி மற்றும் நகர்புற மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜக்டிப் சிங் டியோ தனது உரையில், தென்மேற்கு மாவட்டத்திற்கு அருகிலுள்ள மசூரியில் உள்ள மக்களின் வீடுகளை இடித்து மீண்டும் கட்டும் திட்டத்திற்கு மட்டுமின்றி, வடகிழக்கு மாவட்டத்தில் இரண்டு மற்றும் மத்திய செபராங் பிறை மற்றும் வட செபராங் பிறை மாவட்டங்களில் தலா ஒன்று என மேலும் நான்கு வீடமைப்புப் புதுப்பித்தல் திட்டங்களைச் செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் டத்தோ முகமட். சாயுத்தி பாக்கார்; பினாங்கு மாநகர் கழக மேயர், டத்தோ Ir. இராஜேந்திரன்; மற்றும் பினாங்கு வீட்டுவசதி வாரிய பொது மேலாளர், ஐனுல் ஃபாதிலாஹ் சம்சுதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கொன் இயோவ், சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளில், பி.எஸ்.பி திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகளை இடித்து மீண்டும் கட்டுவதற்கு அதிகாரிகள் குறைந்த எண்ணிக்கையிலான அசல் குடியிருப்பாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கூறினார்.

ஆனால் முன்மொழியப்பட்ட மசூரி திட்டத்தில், தற்போதுள்ள தொடர்புடைய சட்டம் ஆதரவாக இல்லாததால், மாநில ஆணையம் முதலில் குடியிருப்பாளர்களிடமிருந்து 100 சதவீத ஒப்புதலைப் பெற வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

மசூரி புதுப்பித்தல் திட்டத்தின் முதல் கட்டம் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொன் இயோவ் மேலும் கூறினார்.

“அசல் குடியிருப்பாளர்களுக்கு ஒரு புதிய வீடு கிடைக்கும்…பி.எஸ்.பி மசூரி திட்டம் முடிந்தவுடன், சம்மந்தப்பட்ட அடுக்குமாடி அசல் குடியிருப்பாளர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள்.

“இடமாற்றம் செயல்முறைக்குப் பிறகு இரண்டாம் கட்டத்தை (பி.எஸ்.பி) செயல்படுத்துவதற்காக காலியான புளோக்கள் இடிக்கப்படும்,” என்று அவர் மேலும் விளக்கினார்.

மசூரியின் அசல் குடியிருப்பாளர்களுக்கு 850 சதுர அடி பரப்பளவில் புதிய வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்; மூன்று அறைகள், இரண்டு குளியலறைகள் மற்றும் பல்வேறு சிறந்த பொழுதுபோக்கு வசதிகள் கொண்டது.

பி.எஸ்.பி மசூரி திட்டத்திற்காக மட்டும் மாநில அரசு ரிம700 மில்லியன் நிதி அளிக்கிறது. இதில் 1,000 அசல் குடியிருப்பாளர்கள் அல்லது 300 குடும்பங்கள் பின்னர் புதிய குடியிருப்புப் பிரிவுகளுக்கு மாற்றப்படுவர்.