பக்காத்தான் ஹராப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்ற அடுத்த 36 மணிநேரம் மிகவும் முக்கியமானது

Admin

புக்கிட் மெர்தாஜாம் – புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்றும் அதன் இலக்கை அடைய பக்காத்தான் ஹராப்பானுக்கு அடுத்த 36 மணிநேரம் மிகவும் முக்கியமானது என்று பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சாவ் கொன் இயோவ் கூறுகிறார்.

15வது பொதுத் தேர்தல் வாக்குப்பளிப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளன.

“இந்தப் பொதுத் தேர்தலில் பொது மக்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்து இரண்டாவது முறை ஆட்சி அமைக்க அதிகாரம் வழங்குவார்கள் என நம்பிக்கை கொள்கிறேன். இல்லையெனில் மீண்டும் தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சி அமைக்கக்கூடும்.

“இது ஒரு சவால் மிக்க பணி என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும், பொது மக்களிடையே கிடைக்கப்பெறும் ஆதரவில், புத்ராஜெயாவை வெல்வதற்கு நெருங்கி வருகிறோம்,” என கூறினார்.

“அடுத்த 36 மணி நேரத்தில் நாம் இன்னும் கொஞ்சம் கடினமாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்,” என்று சிம்பாங் அம்பாட்டில் உள்ள கம்போங் தெர்சுசுனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட சாவ் இவ்வாறு கூறினார்.

வருகின்ற நவம்பர்,19 (சனிக்கிழமை) அன்று வாக்களிப்பு தினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பத்து காவான் வேட்பாளருமான சாவ் கொன் இயோவ் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியோவ்-லியுங்; ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் ஹின் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்களுக்கு மறுசுழற்சி பையுடன் இணைத்து தேர்தல் குறித்த தகவல்கள், 2023 ஆண்டுக்கான நாள்காட்டி மற்றும் பிரச்சூரங்கள் வழங்கப்படுகின்றன.

இன்றிரவு பெர்கம்புங்கான் ஜூரு, இரவுச் சந்தை தளத்தில் நடைபெறும் தேர்தல் பேருரையில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

தாமான் பெர்விராவில், சாவ் மற்றும் அவர் தம் குழுவினருடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தை உற்சாகத்துடன் தொடங்கினர்.

வாக்குப்பதிவு நாள் வரை பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இருக்கும் இடங்களுக்குத் தங்களால் இயன்ற வரை செல்ல இணக்கம் கொண்டுள்ளதாகக் கூறினார்.

பொது மக்கள் தாங்கள் விரும்பும் மத்திய அரசாங்கத்தை நிர்ணயிப்பதற்கு வாக்களிக்க முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சாவ் மற்றும் ஆதரவாளர்கள் பின்னர் புக்கிட் தெங்காவில் உள்ள கம்போங் சிரேவில் மக்களை சந்திக்க முனைந்தனர்.