பினாங்கில் இன்று முதல் தானியங்கி வாகன நிறுத்தம் அபராதம் அறிமுகம்

img 20250424 wa0032

 

செபராங் ஜெயா – பினாங்கில்
இன்று முதல் வாகனம் நிறுத்தும் அபராதம் ‘தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகார முறை’ (automated number plate recognition system) அமலாக்கம் காணும்.

இந்த செயலின் வழி வாகனத்தின் பதிவு எண்களை ஸ்கேன் செய்து உடனடியாக செலுத்தப்படாத வாகனம் நிறுத்தும் கட்டணங்களை கண்டறியவும், அதேவேளையில் அதிகாரிகள் நேரில் இருக்க வேண்டிய அவசியமின்றி செயலி வாயிலாகவே அபராதம் அனுப்பப்படும்.

 

img 20250424 wa0031

ஊராட்சி மன்றங்களின் வாகனம் நிறுத்தும் கட்டணங்களுக்கான ஒரே தளமான பினாங்கு ஸ்மார்ட் வாகன நிறுத்தும் செயலி மூலம் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவிப்புகள் நேரடியாக அனுப்பப்படுகின்றன.

மாநில ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர்
ஜேசன் ஹெங் மூய் லாய் கூறுகையில், இந்த மேம்பாட்டுத் திட்டம் சிறு பிழைகளுடன் விரைவான, ஆக்கப்பூர்வமான அமலாக்கத்தைக் குறிக்கிறது, என்றார்.

 

“இது வெறும் தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமல்ல. ஸ்மார்ட் அமலாக்கம், முழு டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் குறைவான காகிதப் பயன்பாட்டுடன் சுற்றுச்சூழலுக்கானப் பராமரிப்பையும் முன்னிலைப் படுத்துகிறது,” என்று ஜேசன் செபராங் பிறை மாநகர் கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பினாங்கின் ஊராட்சி மன்றங்களான பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை மாநகர் கழகங்களுக்கு தலா ஐந்து ANPR யூனிட்களை கொண்டு செயல்படுத்தப்படும்.

ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷனைப் பயன்படுத்தி, ANPR அமைப்பு சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) தரவுத்தளத்துடன் வாகனத்தின் பதிவு எண்களைச் சரிபார்க்கிறது.

ஒரு வாகனம் சட்டவிரோதமாகவோ அல்லது பணம் செலுத்தாமலோ நிறுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், உரிமையாளரின் விவரங்கள் JPJ பதிவுகளிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று ஜேசன் கூறினார்.

 

இந்த நடவடிக்கை இயக்கச் செலவுகளைக் குறைக்கும் என்றும், ஒரு ரோந்துப் பிரிவுக்கு மனித வளத் தேவைகளை 60% குறைக்கும் என்றும் அவர் கூறினார்.