பிறை – பினாங்கு முத்தியாரா மகளிர் அமைப்பு (PWMPP) செபராங் பிறை மாநகர் கழகத்துடன் (எம்.பி.எஸ்.பி) இணைந்து, சாய் லெங் பார்க் அங்காடி உணவகத்தில் ‘ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப்பை அற்ற’ பிரச்சாரம் தொடக்க விழாக் கண்டது.
இந்நிகழ்ச்சியில், PWMPP தலைவரும் மாநில முதலமைச்சர் துணைவியாருமான தான் லீன் கீ, மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமுவுடன் இணைந்து மொத்தம் 32 ‘டிஃபின்’ கொள்கலன்களை வியாபாரிகளுக்கு விநியோகித்தார். மேலும் 100 கொள்கலன்கள் வருகையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
PWMPP சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘2025 தினசரி நெகிழிப்பை பயன்பாடு அற்ற பினாங்கு மாநிலம்’ எனும் பிரச்சாரத்தில் நெகிழிக் கழிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக ‘டிஃபின்’ கொள்கலன்களை வழங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரம், மறுபயன்பாட்டு உணவுக் கொள்கலன்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், நெகிழிப்பை பயன்பாட்டைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் துணைபுரியும் என்று தான் கூறினார்.
“இந்தப் பிரச்சாரத்திற்கு ஒரு முன்மாதிரியாக உருமாற்றம் காண்பதற்கும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் ஒத்துழைப்பு நல்கிய சாய் லெங் பார்க் ஹாக்கர் மையத்தில் உள்ள அனைத்து வர்த்தகர்கள் மற்றும் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
“ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பை பயன்பாட்டைக் குறைப்பதற்கும், சுற்றியுள்ள சமூகத்திற்கு ஒரு நேர்மறையான முன்மாதிரியை அமைப்பதற்கும் இது முக்கியமான முதல் படியாகத் திகழ்கிறது.
“அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த முயற்சி வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். சமூகம், வர்த்தகர்கள், உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவு இந்தப் பிரச்சாரத்தை வெற்றிபெறச் செய்வதற்கு முக்கிய திறவுக்கோலாக அமைகிறது.
“இதனைத் தொடங்குவதற்கு, உணவை வாங்கும் போது சொந்தமாக உணவுப் பாத்திரங்களைக் கொண்டு வருதல், ஷாப்பிங் செய்யும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைப் பயன்படுத்துதல் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் இதைச் செய்ய ஊக்குவிப்பது போன்ற எளிய வழிமுறைகளை நாம் கையாளலாம்.
இதற்கிடையில், இந்த ஆண்டின் சுதந்திர தினத்தன்று, நாங்கள் ‘நெகிழிப்பை பயன்பாட்டிலிருந்து விடுப்படுவோம், என சுந்தராஜூ நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பினாங்கு வாழ் மக்கள் ஏற்கனவே பொருட்களை வாங்கும் போது மறுசுழற்சி பைகளை கொண்டு வருவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்களில் பெரும்பாலோர் அந்த பைகளை தங்களுடன் வைத்திருக்கிறார்கள்.
“வீசப்படும் நெகிழிப்பைகளை மீன்கள் உட்கொள்ளும் போது அது இறுதியில் நுண்ணிய பிளாஸ்டிக்குகளாக உடைந்து, அதனை மனிதர்கள் உட்கொள்ளும் போது தீங்கு விளைவிக்கிறது என்பதை சுந்தராஜூ எடுத்துரைத்தார்.
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ படேருல் அமீன் அப்துல் ஹமிட், இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக, மூல பொருட்களில் கழிவுப் பொருட்களைப் பிரிக்கும் வழிமுறைகள் மற்றும் ‘ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப்பை அற்ற’ பிரச்சாரம் தொடர்பான கையேடுகளும் வணிகர்களுக்கு வழங்கப்பட்டதாகப் பகிர்ந்து கொண்டார்.
“கூடுதலாக, இந்தப் பிரச்சாரம் 8R கருத்தை அறிமுகப்படுத்துகிறது, அதாவது மறுபரிசீலனை, மறுப்பு, மறுபயன்பாடு, குறைத்தல், பழுதுபார்த்தல், மறுபரிசீலனை செய்தல், மீட்டெடுத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் போன்ற தினசரி பழக்கங்களை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கைமுறைக்கு மாற்றுவதற்கான வழிகாட்டியாக இருக்கும்.
“வர்த்தகர்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பொது மக்களின் தீவிர ஈடுபாட்டுடன், இந்த முயற்சி நேர்மறையான முடிவுகளைத் தரும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.