பினாங்கு மாநிலத்தில் வெப்பக் காற்றை உள்ளடக்கிய மாபெரும் வடிவமைப்பைக் கொண்ட காற்றழுத்த பலூன்கள் பாடாங் போலோவிலிருந்து வானில் மிதந்து கொண்ட ஜொர்ச்டவுன் உலக பாரம்பரிய தளத்தை மற்றொரு கோணத்தில் காணப்பட்டது.. இப்பெரிய பலூன்களில் உலா வந்த பினாங்கு மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் வித்தியாசமான அனுபவத்தால் பரவசமடைந்தனர் .
இந்த பலூன்களுடனான சுற்றுப்பயணிகளின் பயணம் கடந்த 21/2/2015 மற்றும் 22/2/2015 ஆகிய இரு நாட்களுக்கு காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இந்த பலூன்களில் பயணிப்பதற்கு பொது மக்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் தலா ஒருவருக்கு ரிம25 கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றார் காற்றழுத்த பலூன் விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஊய் சொக் யான். சுற்றுப்பயணிகள் யூத் பூங்காவில் கடந்த இரண்டு நாட்களுக்குப் பறந்த காற்றழுத்த பலூன்கள் பிரமிக்க வைத்த காட்சிகளைக் கண்டுகளித்தனர். மேலும், வருகையாளர்கள் இப்பெரிய பலூன்களின் அருகில் புகைப்படம் எடுத்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது .
காற்றழுத்த பலூன் விழாக்கிடையே குடும்ப நட்புறவு பாங்கான நடவடிக்கைகள் குறிப்பாக வேடிக்கை விளையாட்டுகள், படைப்புப் பட்டறைகள், வில்வித்தை புகைப்படப் போட்டி மற்றும் இதர நிகழ்வுகளும் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன.. இவ்விழாவை மேலும் மெருகூட்ட, கடந்த 21 பிப்ரவரி மாதம் காலை மணி 7.00-க்கு பாடாங் போலோவிலிருந்து யூத் பூங்கா வரை நடைபெற்ற நட்பு ஓட்டத்தில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கலந்து சிறப்பித்தார். இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த மாநில முதல்வர் காற்றழுத்த பலூன் விழா முதல் முறையாக பினாங்கில் நடைபெறுவதை அகம் மகிழத் தெரிவித்தார். மேலும் மாநில அரசு சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்வதை இவ்விழா பிரதிப்பலிக்கிறது என்றார்