முள்நாரிப்பழம் என அழைக்கப்படும் டுரியான் பருவ காலம் பினாங்கு மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற பாலே பூலாவில் தொடங்கியது. இதனை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் பினாங்கு துணை செயலாளர் அதிகாரி (மேலாண்மை) காசாலி பின் தேரஹ்மான். பழங்களின் ராஜா என அழைக்கப்படும் டுரியான் பழங்கள் தெவிட்ட வைக்கும் சுவைகளிலில் பினாங்கு பாலே பூலாவ் பகுதியில் கிடைக்கும் என்பது நாடறிந்த உண்மையாகும்.
பினாங்கில் டுரியான் பருவம் கடந்த 15 ஜூன் 2015-ஆம் நாள் பாலே பூலாவ் அஞ்சோங் இண்டாவில் தொடங்கப்பட்டது. இப்பருவ காலம் இரண்டு மாதத்திற்கு நீடித்திருக்கும். இத்தொடக்க விழாவில் வருகையளித்திருந்த பொது மக்கள், நிருபர்கள் என அனைவருக்கும் இலவசமாக டுரியான் சுலைகள் வழங்கப்பட்டன. மேலும், நிகழ்வில் வரவேற்பு உரை வழங்கிய காசாலி அவர்கள் உள்நாட்டு பழங்களை ஆதரிக்கும் அம்சமாக ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா நடத்தப்படுவதாகக் கூறினார். அஞ்சோங் இண்டா சாலை, ஜாலான் தெலோக் கும்பார், ஜாலான் துன் சர்டோன் சாலையில் அமைந்திருக்கும் சுமார் 32 கடைகளில் இப்பழத்தை வாங்கலாம். அதோடு ஜேம்ஸ் வொங் பழத்தோட்டம், திதி கெராவாங் பழத்தோட்டம், ஸ்தோன் ஆவுஸ், 77 டுரியான் பழத்தோட்டம், பாக் ஷரிப் பழத்தோட்டம் மற்றும் லாய் தேக் ஜுன் பழத்தோட்டம் என ஆறு பழத்தோட்டங்களுக்கு நேரடியாக சென்றும் வாங்கலாம். டுரியான் பழங்களின் விலைகள் சந்தை விலைகளுக்கு ஏற்ப விற்கப்படும்.
மேலும், இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்களை டுரியான் பழம் சாப்பிட துண்டுவற்கு என அறிவித்தார் ஏற்பாட்டுக் குழு தலைவர் முகமது டாவுட். வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்கு ஏதுவாகவும் அதிகமான கடைகள் விற்பனையில் அமர்த்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி ஆட்சிக்குழு உறுப்பினரும் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குறிய சாவ் கொன் யாவ் டுரியான் பருவக் காலத்தை முன்னிட்டு நிருபர்களுக்கு டுரியான் விருந்தோம்பல் நடத்தினார். இந்நிகழ்வில் அனைத்து நாளிதழ் நிருபர்களும் கலந்து சிறப்பித்தனர்.