ஜார்ச்டவுன் – வருகின்ற பிப்ரவரி,11 அன்று தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு உள்ளூரில் எழுந்துள்ள தேங்காய் பற்றாக்குறையினால் பினாங்கின் சில பகுதிகளில் தேங்காய்களின் விலை ரிம3.90 வரை உயர்ந்துள்ளது.
ஒரு தேங்காயின் முந்தைய விலை சராசரியாக ரிம2.50 முதல் ரிம2.60 வரை இருந்த நிலையில், தற்போது ரிம3.90 வரை விலை உயர்ந்துள்ளது. எனவே, கடந்த வாரம் முதல் உள்ளூர் தேங்காய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் (CAP) கல்வி அதிகாரி என்.வி சுப்பாராவ் கூறினார்.
“ஒரு தேங்காயின் அதிகபட்ச விலை இதுவரை ரிம3.90 என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்களும் ஒவ்வொன்றும் ரிம3 வரை விற்கப்படுகின்றன.
“பேராக், பாகான் டத்தோக்கில் உள்ள தென்னை உற்பத்தியாளர்களை CAP தொடர்புக் கொண்டது, மேலும் அவர்கள் தோட்டங்களில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினர், இந்த பிரச்சனை மே மாதம் முதல் நீடித்து வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
மலேசியாவில் மோசமடைந்து வரும் தேங்காய் உற்பத்தி பிரச்சனைக்குத் தீர்வு காண வேளாண்மை துறையை, குறிப்பாக அதன் பயிர் ஆராய்ச்சி நிபுணர்களையும் கேட்டுக் கொண்டதாக சுப்பாராவ் கூறினார்.
“இதுவரை, சீரற்ற வானிலையே முக்கியக் காரணமாகும். இந்த உற்பத்திப் பிரச்சனையைத் தீர்க்க விவசாயிகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அன்பா தேங்காய் சென் பெர்ஹாட் நிறுவன உரிமையாளர் சரஸ்வதி, 66, தாம் இப்போது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 2,000 முதல் 2,500 தேங்காய்களை மட்டுமே பெறுவதாகக் கூறினார். இது முன்னதாக விநியோக நிலைகளை விட 80 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வீழ்ச்சியாகும்.
இதன் விளைவாக, பினாங்கில் உள்ள முன்னணி தேங்காய் விற்பனையாளர்கள் தைப்பூசத்திற்கான தேங்காய் ஆர்டர்ளை ஏற்க மாட்டோம் என்று அறிவித்தார். பொதுவாக தைப்பூசக் காலத்தில் 80,000 முதல் 100,000 தேங்காய்கள் விற்கப்படும்.
“கடந்த காலங்களில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 10,000 முதல் 15,000 தேங்காய்கள் கிடைத்தன, மாலை வரை அவற்றை விற்க முடியும். ஆனால் இப்போது, மதியமே கடையை மூடிவிடுகிறோம்.
“தினசரி பயன்பாட்டிற்குக் கூட தேங்காய் போதாது, தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு மட்டும் எவ்வாறு போதும். தேங்காய்ப்பால், துருவிய தேங்காய் அதிகம் விநியோகிக்கப்படும் ரம்ஜான், நோன்புப் பெருநாள் வரை இந்தப் பிரச்சனை தொடருமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.
அவரது கடையில், தேங்காய்கள் ஒவ்வொன்றும் ரிம2.20 க்கு விற்கப்படுகின்றன, அதே நேரத்தில், தேங்காய் பால் ஒரு கிலோ ரிம14 விலையில் விற்கப்படுகிறது. அவர் தைப்பிங், பேராக் மற்றும் பினாங்கு ஜெலுத்தோங்கில் தேங்காய் விற்பனை கடையை நடத்தி வருகிறார்.