2013-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பு பினாங்கு மாநிலத்தில் இனிதே நடைபெற்றது. இவ்விழா கூட்டரசு அரசு மற்றும் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சு ஒருங்கிணைப்போடு நடைபெற்றது. இந்நிகழ்வு கடந்த 25/12/2013-ஆம் நாள் பாடாங் கோத்தா லாமாவில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வினை பிரதமர், மாநில முதல்வர் மற்றும் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகிய மூவரும் இணைந்து ராட்சத மிட்டாய்களை மேடையில் வைத்து அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தனர். இத்திறந்த இல்ல உபசரிப்பில் 10,000-க்கும் மேற்பட்ட பல இன மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்களாக நாட்டின் பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிப்பிற்குறிய டத்தோ ஸ்ரீ முகமது நஸ்ரி, மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய அளவிலான கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வு இடம்பெறுவதற்கு பினாங்கு மாநிலத்தைத் தேர்வுச் செய்ததை எண்ணி அகம் மகிழ்ந்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இதன் மூலம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுப்பயணிகளைப் பினாங்கு மாநிலத்திற்கு வரவேற்க முடிகிறது என்றார்.
பல இன மக்கள் வாழும் மலேசியாவில் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒன்றுப்பட்டுத் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றார் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக். கலை மற்றும் கலாச்சாரத்துறையில் பிரசித்துப் பெற்ற நான்கு அரசு சார்பற்ற இயக்கங்களுக்குத் தலா ரிம10 000 வழங்கப்பட்டன.
பினாங்கு மாநிலத்தில் தேசிய நிலையில் மட்டுமின்றி மாநில அளவிலும் கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பு ஐந்தாவது முறையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாநில அளவிலான கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டம் கடந்த டிசம்பர் 15-இல் பாடாங் கோத்தா தளத்தில் நடைபெற்றது. தொடர்ந்து ஐந்தாம் முறையாக நடைபெறும் இந்த மாநில அளவிலான கிறிஸ்துமஸ் விருந்துபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்றனர். இந்தக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்குப் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சிறப்பு வருகையளித்தார்.
மாநில அளவிலானத் திறந்த இல்ல உபசரிப்பில் பினாங்கு மாநில பிரபல உணவு வகைகளான லக்சா பினாங், மீன் தலைக்கறி, சார் கோய் தியாவ், செண்டோல் மற்றும் பல இடம்பெற்றன. மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பின் தலைவர் திரு சாம் சுரேந்திரன் கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பிற்கு வருகை அளித்த அனைவரையும் வருக வருக என வரவேற்றதுடன் இவ்விழா நடைபெறுவதற்கு உறுதுணையாகத் திகழ்ந்த மாநில மக்கள் கூட்டணி அரசிற்கும் மனமார்ந்த நன்றி மாலை சூட்டினார். மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பின் சார்பாக சத் விண்சன் போல், காவான் டுரோப் இன் செண்டர், சாரிஸ் இல்லம், ஆசியா சமூக சேவை மையம், ஹவ்ஸ் ஒப் ஓப் மற்றும் மத் மிரிம் கேன்சர் மருத்துவமனை ஆகிய ஆறு தொண்டு அமைப்புகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு மாநில முதல்வர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கிறிஸ்துவக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆகிய முக்கிய பிரமுகர்கள் உட்பட பல்லின மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
படம் 1: பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள் ராட்சத மிட்டாய்களை மேடையில் வைத்து அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்