“சூப்பர் அல் நினோ”(SUPER EL NINO) எனும் பருவநிலை மாற்றம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்பதால் பினாங்கு வாழ் மக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் நீர் விநியோக வாரியம் தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் ஜாசானி மைடின்சா. இந்தப் பருவகால மாற்றத்தால் சுற்றுச்சூழல் அதிகமான வெப்பம் ஏற்படுவதோடு வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆராய்ச்சி துறை அறிவித்துள்ளது.
கடந்த 29/12/2015-ஆம் நாள் தான் இறுதியாக பினாங்கு ஆயர் ஈத்தாம் அணையில் மழை பெய்ததாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. பினாங்கு மாநிலத்தின் இரண்டு பெரிய அணைகளான ஆயர் ஈத்தாம் அணையில் 87.6% மற்றும் தெலுக் பஹாங் அணையில் 83.2% நீர் அளவு குறிப்பிடப்படுகிறது. மெங்குவாங் நீர் அணை விரிவாக்கத் திட்டம் மேற்கொள்ளப்படுவதால் சுங்கை மூடா நீரின் அளவு 2.53 மீட்டர் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பினாங்கு மாநில நீர் அணைகளின் நிலை “சுகாதாரமாக” இருப்பதாக அதாவது நீர் பங்கீட்டு முறை ஏற்படாது என மேலும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தொடர்ந்து சுங்கை மூடா ஆற்றிலிருந்து நீர் பெறப்படும்.
2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சி காலம் மீண்டும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலை தொடர்ந்தால் மாநில அரசு பல அரிய முயற்சிகள் மேற்கொண்டு கடந்த ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் நீர் பங்கீட்டு முறை அமல்படுத்தாது என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். 2016-ஆம் ஆண்டு எவ்வித சூழ்நிலையிலும் பினாங்கு நீர் விநியோக வாரியம் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்தாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. பினாங்கில் நீர் பற்றாக்குறை தவிர்ப்பதற்குப் பொது மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.