பினாங்கில் புதிய பரிமானதில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டம்

20250106 101216

புக்கிட் மெர்தாஜாம் – பினாங்கு மாநில அரசாங்கம் பெர்மாத்தாங் திங்கி பகுதியில் ‘co-house’ அல்லது ‘townhouse’ எனும் புதிய வகை வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ, பினாங்கு வீட்டுவசதி வாரியம் (LPNPP) மூலம், C3 பிரிவு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ‘டவுன்ஹவுஸ்’ வடிவமைப்புடன் மாடி வீடுகள் அல்லது தரை வீடுகளை உருவாக்குவது இதுவே முதல் முறை என்று பெர்மாத்தாங் திங்கி வீடமைப்பு அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
20250106 101619

“நாங்கள் இதை ஒரு டவுன்ஹவுஸாக உருவாக்குகிறோம். இத்திட்டத்தில் கட்டப்படும் ஒரு மாடி வீட்டில், இரண்டு குடியிருப்புகளுக்கு இடமளிக்கிறது . அதாவது ஒரு குடும்பம் தரை தளத்திலும் மற்றொரு குடும்பம் மேல் தளத்திலும் குடியிருப்பர்.

“என்னைப் பொறுத்தவரை, தரை வீட்டில் அல்லது நிலம் கொண்ட வீட்டில் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு பினாங்கு வாழ் மக்களின் கனவாகும். மேலும் இந்த வீடுகளை நிர்மாணிப்பதன் மூலம் மலிவு விலையில் அவர்களின் கனவை நனவாக்க முடியும்,” என்றார்.
20250106 113403
பினாங்கு மாநில ஆளுநர் துன் அகமது ஃபுஸி அப்துல் ரசாக் அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தார்.

பெர்மாத்தாங் திங்கி பகுதியின் இருப்பிடம், குறைவான மக்கள்தொகை; பெரிய அளவிலான மேம்பாடுகளிலிருந்து தொலைவில் உள்ளது மற்றும் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான குறைந்த தேவை காரணமாக இங்கு தரை வீடமைப்புத் திட்டம் அமைக்கவிருப்பதாக சுந்தராஜு கூறினார்.

“தற்போது, இப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அதிக தேவை இல்லை, எனவே இங்கு தரை வீடுகளுடன் இந்தத் திட்டத்தைத் தொடங்குகிறோம். காலப்போக்கில், இப்பகுதி வளர்ச்சியடைந்து முதிர்ச்சியடையும் போது, இங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்,” என்றார்.

இத்திட்டம் லாட் 33917, முக்கிம் 14, பெர்மாத்தாங் திங்கி, ஒரு வீட்டுக்கு அதிகபட்சமாக ரிம250,000 விலை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 10 ஹெக்டேர் நிலத்தில் 664 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதை உள்ளடக்கியது. இது தொழில்மயமாக்கப்பட்ட கட்டிட அமைப்பை (IBS) பயன்படுத்தும் மற்றும் 2028 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், முத்துத் தீவு என அழைக்கப்படும் பினாங்கு தீவின் சாரமாக வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தை முத்தியாரா வீடமைப்புத் திட்டம் (Rumah MutiaraKu) என மறுபெயரிடப்படும் என்று சுந்தராஜு கூறினார்.

வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புப் பெறுநர்களிடையே வீட்டு உரிமையின் உணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் மலிவு விலை வீடுகள் என்ற எதிர்மறையான கூற்றுகளை தவிர்ப்பதற்கும் மறுபெயரிட இணக்கம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ பெயர் மாற்றம் இந்த மாத இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்

இந்நிகழ்ச்சியில், செபராங் பிறை மேயர் டத்தோ படேருல் அமீன் அப்துல் ஹமீத் மற்றும் LPNPP தலைமை வணிக அதிகாரி ஃபகுராசி இப்னு உமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.