ஜார்ச்டவுன் – இந்நாட்டில் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்படுவதற்கு முதல் காரணியாக விளங்குவது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்பிரச்சனையைக் களையும் நோக்கத்தில் பினாங்கு மாநில அரசின் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள குடியுரிமை விவரங்களுக்கான சிறப்பு குழுவினர் மேலும் ஐவருக்கு குடியுரிமை கிடைக்க உதவி புரிந்துள்ளனர் என குடியுரிமை அதிகாரி இரட்சிணாமூர்த்தி முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
நிபோங் திபாலை சேர்ந்த திரு மாதவன் நாயர் ஓர் ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுயேச்சையாக தேசிய பதிவு இலாகாவிடம் அச்சிறுவனின் குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தும் அது தோல்வியை தழுவியது. பின்பு, மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமியைத் தொடர்புக் கொண்டார். குடியுரிமை அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் முறையான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், பேராசிரியர் ப.இராமசாமி உள்நாட்டு விவகாரத் துறை அமைச்சுக்கும் கடிதம் அனுப்பினார்.
இறுதியில், தர்வின் ஜெய்டன் நாயர் எனும் அச்சுறுவனுக்கு ஒன்பதாவது வயதில் மலேசிய குடியுரிமை வழங்கப்பட்டது. தகுந்த நேரத்தில் உதவிகள் வழங்கிய பேராசிரியர் ப.இராமசாமிக்கும் அவர்தம் குழுவினருக்கும் மாதவன் நாயர் நன்றியை நவிழ்ந்தார்.
சுங்கை பினாங்கை சேர்ந்த தமிழ் தேவி,65 சிவப்பு நிற அடையாள அட்டையுடன் கடந்த காலங்களில் எவ்வித சலுகையும் இன்றி தவித்து வந்தார். அண்மையில் காலில் முறிவு ஏற்பட்டு அவருக்கு ஊழியர் காப்புறுதி (சொக்சோ) வழங்கப்பட்டது. ஆனால், அது சில காலம் கூட நீடிக்காமல் சிவப்பு நிற அடையாள அட்டை கொண்டிருக்கும் காரணத்தால் அது உடனடியாக நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். தனித்து வாழும் தாய்மாதான இவர் சமூகநல துறையின் உதவிகள் கூட பெற முடியாமல் சிரமத்தை எதிர்நோக்கினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பினாங்கு மாநில குடியுரிமை அதிகாரி வேலனை தொடர்புக் கொண்டு முறையான ஆவணங்களை சமர்ப்பித்து நீல நிற அடையாள அட்டையை பெற விண்ணப்பித்துள்ளார். பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின், நீல நிற அடையாள அட்டை பெற்ற தமிழ் தேவி இனிமேல் அனைத்து உதவி திட்டங்களும் தமக்கு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, 66 வயது மதிக்கத்தக்க சீன வயோதி எங் சுவி லின் @ எங் மியாவ் லின்-க்கும் குடியுரிமை கிடைத்துள்ளது. பினாங்கு மாநில அரசின் கீழ் செயல்படும் குடியுரிமை அதிகாரிகளுக்கும் மாநில அரசிற்கும் நன்றியை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து, வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்ட யாப் சின் ஹோங் தனது மகனான யாப் யோன் சீ (வயது 9) குடியுரிமை கிடைக்காமல் அவுதியுற்றுள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகள் போராட்டத்துற்குப் பிறகு அவரின் மகனுக்கு குடியுரிமை கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்ந்தார். 60 வயடு மதிக்கத்தக்க சபியா பிந்தி ஹம்சா எட்டு வயது சிறுவனான முகமது சஃபுவான் காவுஸ் பின் அப்துல் இரஹிமை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இச்சிறுவனின் தாயார் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட கால விண்ணப்பத்திற்கு பிறகு அச்சிறுவனுக்கு குடியுரிமை கிடைத்துள்ளது பாராட்டகுரியது.
கடந்த 2013 முதல் பிப்ரவரி மாதம் 2020-ஆம் ஆண்டு வரை பினாங்கு மாநில குடியுரிமை குழுவினரின் முயற்சியில் 1,539 பொது மக்கள் குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது பாராட்டக்குரியதாகும்
“மேலும், அதிகமான குடியுரிமை விண்ணப்பங்கள் இன்னும் கேள்விக்குரியாகவே உள்ளது என்பது வேதனை அளிக்கிறது. இருப்பினும், பினாங்கு மாநில குடியுரிமை அதிகாரிகள் இனம் பேதமின்றி அனைத்து இனத்தவருக்கும் உதவிக்கரம் நல்குகின்றனர்,” என இரட்சணாமூர்த்தி விளக்கமளித்தார்.