பத்து உபான் – இந்த வார இறுதியில் பினாங்கில் ஒரு பிரமாண்டமான பொங்கல் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இது தமிழர்களின் வளமான மரபுகளை ஒரு கிராமப்புற பண்டிகை சூழலில் வெளிப்படுத்துகிறது.
‘பத்து உபான் கலாச்சார & மடானி பொங்கல் விழா’ வருகின்ற ஜனவரி 19-ஆம் தேதி பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பத்து உபான் இளைஞர் மற்றும் விளையாட்டு வளாகத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நுழைவு இலவசம் என நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினருமான குமரேசன் தெரிவித்தார்.
“200 கி.கிராம் எடைக் கொண்ட பூக்களால் 15 x15 அடி அளவிலான பொங்கல் பானையை அலங்கரித்து உருவாக்குவதன் மூலம் மலேசிய சாதனை புத்தகத்தில் (MBOR) இடம் பெற முயற்சிப்பது இந்நிகழ்ச்சியின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று என குமரேசன் கூறினார்.
மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக மொத்தம் 20 மாட்டு வண்டிகளின் அணிவகுப்பு ஆகும். இது மிண்டன் ஹைட்ஸிலிருந்து பத்து உபான் இளைஞர் மற்றும் விளையாட்டு அரங்கத்திற்கு 2 கி.மீ தூரம் பயணிக்கும்.
“பத்து உபான் இளைஞர் மற்றும் விளையாட்டு அரங்கத்தின் வளாகத்திற்குள் மாட்டு வண்டிகளில் சவாரி செய்யும் வாய்ப்பையும் பார்வையாளர்கள் பெறுவார்கள்.
“இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரம்பரிய முறையில் திருவிழா வைபவம் போல பூ கட்டும் போட்டி, குத்து விளக்கு அலங்காரப் போட்டி, உறி அடித்தல் போட்டி மற்றும் பல போட்டிகளும் இடம்பெறும்.
“பாரம்பரிய உணவான பொங்கல் தயாரிப்பதில் 300 பங்கேற்பாளர்களுக்கான பொங்கல் சமையல் போட்டியும் நடைபெறும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஊழியர் சேமநிதி வாரியம் (EPF), மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா), SME கோர்ப், ரக்யாட் வங்கி, சமூகப் பாதுகாப்பு அமைப்பின்(Socso), பினாங்கு மேம்பாட்டுக் கழகம், அமனா இக்தியார், மலேசிய சமூக நலத் துறை,
மற்றும் பல அரசு மற்றும் அரசு சாரா நிறுவன அமைப்புகள் சாவடிகள் அமைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் அதிர்ஷ்ட்ட குழுக்கலும் இடம்பெறும்.
“இதுவரை, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிக்கு 1,000 பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், அன்றைய தினம் மேலும் 1,000 பேர் நேரடியாகப் பதிவு செய்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“இந்தியச் சமூகத்தினர் மட்டுமல்ல, அனைத்து இன மக்களும் இந்த ஒற்றுமைப் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், உணவுக் கடைகள் மட்டுமின்றி சந்தீஷ், விகடகவி மற்றும் பிற உள்ளூர் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
“இக்கொண்டாட்டத்திற்கு உற்சாகத்தை சேர்க்க மாட்டு வண்டிகளைக் கொண்டுவருவது சட்டமன்ற உறுப்பினர் குமரேசனின் ஆலோசனையாகும். தமிழ் மரபுகளை முன்னிலைப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான் இந்த முயற்சிகள் அனைத்தும் எடுக்கப்படுகின்றன,” என்று கீ குளோபல் நெட்வொர்க்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முகிலன் தெரிவித்தார்.
தமிழ்ப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டி மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அறியப்படுகிறது.