பினாங்கில் 11-வது உலகத் தமிழ் மாநாடு

Admin
whatsapp image 2024 10 14 at 12.18.28

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக 11-வது உலகத் தமிழ் மாநாடு எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 4 & 5 திகதிகளில் ஶ்ரீ பினாங்கு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பும், உலகத் தமிழ் வர்த்தக அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலக இணைப்பு மாநாடு, மகளிர் தலைமைத்துவ அமர்வு மற்றும் பல துணை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

கலை, கலாச்சாரம், பாரம்பரிய உணவு, ஆடை திருவிழா, பண்டைய தமிழர்களின் வளமான வரலாறு மற்றும் அனைத்துலக வணிக உரிமையாளர்கள் கருத்தரங்கம் ஆகியவை அடங்கும்.

அனைத்துலக உறவுகளை வளர்ப்பதில் பினாங்கின் பங்கை வலுப்படுத்தவும், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான தலமாக அதன் நற்பெயரை மேம்படுத்தவும் இந்த மாநாடு ஒரு தளமாக அமையும் என்று மாநில சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வ பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹொன் வாய் கூறினார்.

“உலகளாவிய இணைப்பு மாநாடு, அனைத்துலக MSME வணிக சந்திப்பு மற்றும் பெண்கள் தலைமைத்துவ அமர்வு போன்ற துணை நிகழ்ச்சிகள் சார்ந்த ஒத்துழைப்பிற்கான புதிய கதவுகளைத் திறக்கும் அர்த்தமுள்ள உரையாடல்கள் நேரடியாக நடத்த ஏதுவாக இருக்கும்.

“இந்தத் தொடர்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி பினாங்கின் பொருளாதார நிலையையும் உலகளாவிய ரீதியிலும் பலப்படுத்தும்.

“பெண்கள் தலைமைத்துவ அமர்வு இந்த நிகழ்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. வணிகம் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது உள்ளடக்கிய பொருளாதார மேம்பாட்டினை வலுப்படுத்த இந்த அமர்வு வழிவகுக்கும்.

“இது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளமாக்கக்கூடிய ஒரு முற்போக்கான மற்றும் பன்முகப் பொருளாதாரத்தை உருவாக்கும் பினாங்கின் தொலைநோக்குப் பார்வையுடன் இணங்குகிறது,” என்று வோங் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது உரையில் இவ்வாறு கூறினார்.

பின்னர், பினாங்குடன் இந்தியா பகிர்ந்து கொள்ளும் செல்வாக்கு மற்றும் நெருங்கிய உறவுகளையும் வோங் எடுத்துரைத்தார். இங்குள்ள பல சாலைகள் இந்தியாவில் உள்ள சின்னங்கள் மற்றும் மாநிலங்களின் பெயர்களால் பெயரிடப்பட்டன.

“சூலியா தெரு ஒரு நல்ல உதாரணம். தமிழ்க் குடிமக்களின் பெயரால் அழைக்கப்பட்ட இந்த தெரு தமிழ்நாட்டுடனான ஆழமான தொடர்பைப் பிரதிபலிக்கிறது.

“ஜார்ச்டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்குள் அமைந்துள்ள சூலியா தெரு காலனித்துவ காலத்தில் ஒரு பரபரப்பான வணிக மையமாக மாறியது.

“தமிழ் வணிகர்களின் செல்வாக்கு இப்பகுதியின் வரலாற்று கட்டிடங்கள், வணிகங்கள் மற்றும் கலாச்சார தளங்களில் இன்னும் உணரப்படுகிறது

“மற்றொரு குறிப்பிடத்தக்க இடம் மெட்ராஸ் தெரு. இந்தப் பாதை பினாங்கின் கலாச்சார மற்றும் நகர்ப்புற இடங்களில் தமிழ்த் தாக்கத்திற்கு ஒரு சான்றாகும்.

“தமிழ்க் குடியேற்றவாசிகள் வர்த்தகத்தில் மட்டுமல்லாமல், உள்ளூர் நிறுவனங்களான தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சமூக மையங்கள் போன்றவற்றை நிறுவுவதற்கும் பங்களித்தனர். இது அவர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்தது,” என்று வோங் மேலும் கூறினார்.

இதற்கிடையில், மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு, முன்னதாக தனது உரையில், பினாங்கும் இந்தியாவும் குறிப்பாக கடந்த காலங்களில் வர்த்தகத்தின் மூலம் நிறுவப்பட்ட பிணைப்பினைப் பற்றி எடுத்துரைத்தார்.

“தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழ் வணிகர்கள் பினாங்கு வளர்ச்சியில் முக்கியப் பங்கினை ஆற்றியுள்ளனர்.

“ஜார்ச்டவுனின் அடையாளங்கள், தெருப் பெயர்கள் மற்றும் நிறுவனங்களில் இன்னும் காணக்கூடிய நிலையான பங்களிப்புகளை அவர்கள் அளித்துள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் மரபையும் வரலாற்றையும் நிலைநிறுத்தும் பலவித நிகழ்ச்சிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வருகையாளர்களைக் கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதை அடுத்து, விரைவில் பினாங்கு மற்றும் இந்தியாவுடனான விமான சேவை திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என டத்தோ ஶ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வளர்க்க மற்றுமொரு மையக்கல்லாக திகழும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சிப் பணியகத்தின் (PCEB) தலைமைச் செயல்முறை அதிகாரி அஷ்வின் குணசேகரன், முதலமைச்சர் ஒருங்கிணைந்த அலுவலக(CMI)பொது மேலாளர் டத்தின் பாரதி சுப்பையா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் உலகத் தமிழ் வர்த்தக அமைப்பு தலைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.