ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் 2025 ஆம் ஆண்டிற்கான இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு நிதியம் (ரிபி) கீழ் 54 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ரிம1.884 மில்லியனை நிதி ஒதுக்கியுள்ளது.
இன்று கொம்தாரில் நடந்த காசோலை வழங்கும் விழாவிற்குப் பிறகு முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“இந்த நிகழ்ச்சி, அனைத்து குடிமக்களுக்கும் நியாயமாகவும் சமமாகவும் ஆட்சி செய்வதில் மாநில அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது.
“இந்த நிதியுதவி முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் மிகவும் திறம்படவும் நிலையானதாகவும் செயல்படுவதை உறுதி செய்கிறது,” என்று சாவ் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ், 26 தாவோயிஸ்ட் அமைப்புகளுக்கு ரிம880,000; நான்கு பெளத்த கோவில்களுக்கு ரிம150,000; 10 இந்து கோவில்களுக்கு ரிம350,000; ஏழு கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு ரிம224,000 மற்றும் ஏழு பிற வழிபாட்டுத் தலங்களுக்கு ரிம280,000 என நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இத்திட்டம் 2016 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, ரிபி செயற்குழுவினர் 333 விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளது. இது மொத்த விநியோகத்தில் ரிம13.6 மில்லியனுக்கும் அதிகமாகும்.
அனைத்து பினாங்கு மக்களின் நலனை ஆதரிப்பதில் மாநில அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை சாவ் மீண்டும் வலியுறுத்தினார். வருகின்ற 2028 ஆண்டு வரை RIBI தேவைகளுக்கு ரிம10 மில்லியன் வழங்க இணங்கம் கொண்ட மாநில ஒற்றுமை வாக்குறுதி அறிக்கையின் ஒரு பகுதியாக இதனை தெரிவித்தார்
“இந்த ஒதுக்கீடு சமூகத்திற்குப் பயனளிக்கவும், நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வுக்குப் பங்களிக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்கவும் திறம்பட பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
பினாங்கு சமூக மேம்பாடு, சமூக நலன் மற்றும் இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம், பினாங்கு அரசாங்கம் 2016 ஆம் ஆண்டில் மாநில நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் துறையின் (JPBD) மேற்பார்வையின் கீழ் ரிபி-க்கான சிறப்பு நிதிக் குழுவை நிறுவியதாகக் கூறினார்.
“அண்மையில், இந்தப் பொறுப்பில் இணைந்து செயல்பட பினாங்கு ஹார்மனி கார்ப்பரேஷன் (ஹார்மோனிகோ) இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளது.
“மேலும், ரிபி நிதியம் சிறப்பு செயற்குழு ஒத்துழைப்புடன் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, நிதி விதிமுறைகளுக்கு இணங்க விநியோகிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
“இந்த செயல்முறை அனைத்து பயனாளிகளுக்கும் சமமான ஆதரவை உறுதி செய்வதற்காக முன்னுரிமை மற்றும் நியாயத்தின் கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது,” என்று லிம் கூறினார்.